பெருவில் 1,200 ஆண்டுகள் பழமையான வாரி அரசுக் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சூன் 28, 2013

இலத்தின் அமெரிக்க நாடான பெருவில் 1,200 ஆண்டுகள் பழமையான கல்லறை ஒன்று பல பெறுமதியான பொருட்களுடனும், பெண்களின் பதனிடப்பட்ட எலும்புக்கூடுகளுடன் தொல்லியலாளர்களால் மீட்கப்பட்டுள்ளது.


வாரி, திவானக்கு இராச்சியங்கள்

தலைநகர் லீமாவுக்கு வடக்கே 280 கிமீ தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் கல்லறை இன்கா நாகரிகம் பரவத் தொடங்குவதற்கு முன்னர் அண்டீசுப் பகுதியை ஆண்டு வந்த வாரி இராச்சியத்தைச் சேர்ந்தது என நம்பப்படுகிறது.


கல்லறையினுள் 63 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் மூன்று வாரி இராச்சிய மகாராணிகளின் எலும்புக்கூடுகள் ஆகும். இவை அனைத்தும் பொன், வெள்ளி நகைகளினால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அழகாக வண்ணப் பூச்சிடப்பட்ட மட்பாண்டங்களும் இருந்தன.


வாரி பண்பாட்டின் அரசுக் கல்லறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதற் தடவையாகும். கல்லறையில் 63 மனித உடல்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பெண்களுடையவை ஆகும். இங்குள்ள பலரின் உடல்கள் வைக்கப்பட்டிருக்கும் முறையில் இருந்து அவர்கள் மனிதப் பலி கொடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தாம் நம்புவதாக தொல்லியலாளர் வியெஸ்லாவ் வியெக்கோவ்ஸ்க்கி தெரிவித்தார்.


"ஆறு எலும்புக்கூடுகள் துணிகளுக்கு மேல் இருக்கவில்லை. இவை ஏனைய புதைவிடங்களுக்கு மேல் மிகவும் விசித்திரமான நிலைகளில் இருப்பதைப் பார்த்தால் அவை மனிதப் பலி கொடுக்கப்பட்ட்டவர்களாக இருக்கலாம் என நாம் நம்புகிறோம் என அவர் கூறினார்.


வாரி நாகரிகம் கிபி 7 முதல் 10ம் நூற்றாண்டு வரை இன்றைய பெருவின் பெரும் பகுதியை ஆண்டு வந்தது. பின்னர் இது திடீரென அழிந்து போனது.


மூலம்[தொகு]