உள்ளடக்கத்துக்குச் செல்

சிரியாவில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக நவநீதம் பிள்ளை அறிவிப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், திசம்பர் 14, 2011

சிரியாவில் தொடரும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.


சிரிய விவகாரம் குறித்து ஐ. நா. பாதுகாப்புச் சபைக்கு விளக்கம் அளிக்கும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். சிரியா நாட்டில், அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக, கடந்த பத்து மாதங்களாக போராட்டம் நடந்து வருகிறது. போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகியுள்ளனர். மக்களின் கோரிக்கை ஏற்காத சிரியா அரசு மீது, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், பொருளாதார தடை விதித்துள்ளன.


இந்த விவகாரம் குறித்து நேற்று முன்தினம் பாதுகாப்பு சபையில் சிறப்பு விவாதம் இடம்பெற்றது. இதில் ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் நவநீதம் பிள்ளையும் பங்கேற்றார். இதன்போது, சிரியாவில் தொடரும் வன்முறைகளால் 5000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். இதில் 14,000க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, இறந்தோரில் குறைந்தது 300 சிறுவர்கள் அடங்குவதாக அவர் தெரிவித்தார். தவிர, சிரியாவில் தொடரும் வன்முறைகளால் 12,400 பேரளவில் அண்மைய நாடுகளில் தஞ்சம் புகுந்தியிருப்பதாக நவநீதம்பிள்ளை தெரிவித்தார். சிரியாவின் நிலவரம் தொடர்ந்து அபாயகரமாகவே இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.


எனினும் இந்த தகவலை ஐ.நா.வுக்கான சிரிய தூதுவர் மறுத்துள்ளார். அடிப்படை அற்ற தகவல்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக சிரியா மீது ஐ. நா. பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்பட்ட கண்டன தீர்மானத்திற்கு சீனா, ரஷ்யா நாடுகள் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.


மூலம்

[தொகு]