அண்டார்க்டிக்காவில் சிக்கிய உருசியக் கப்பலை மீட்க ஆத்திரேலிய பனி உடைப்புக் கப்பல் விரைகிறது

விக்கிசெய்தி இலிருந்து
அண்டார்க்டிக்காவில் இருந்து ஏனைய செய்திகள்
அண்டார்க்டிக்காவின் அமைவிடம்

அண்டார்க்டிக்காவின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

ஞாயிறு, திசம்பர் 29, 2013

அண்டார்க்டிக்காவின் கடல் பனிக்கட்டியில் சிக்குண்டுள்ள உருசியக் கப்பலை மீட்பதற்காக ஆத்திரேலியாவின் பனியுடைப்புக் கப்பல் ஒன்று அங்கு விரிந்துள்ளதாக ஆத்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.


அக்காதெமிக் சொக்கால்ஸ்கி

அகாதெமிக் சொக்கால்ஸ்கி என்ற ஆய்வு, மற்றும் சுற்றுலாக் கப்பல் சிக்குண்டுள்ள இடத்தில் இருந்து 100 கடல் மைல் (185 கிமீ) தூரத்தில் அவுரோரா அஸ்திராலிசு என்ற ஆத்திரேலியக் கப்பல் சென்று கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கப்பல் தனது இலக்கை ஜிஎம்டி நேரம் பகல் 12 மணியளவில் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


1982 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்துக்காக வட, தென் முனைகளை ஆய்வு செய்வதற்காக பின்லாந்தில் கட்டப்பட்ட அகாதெமிக் சொக்கால்ஸ்கி என்ற இக்கப்பல் உருசிய அரசுக்கு சொந்தமானது. ஆத்திரேலியாவின் அவுரோரா எக்சுபெடிஷன் என்ற நிறுவனம் இதனை வாடகைக்கு எடுத்திருந்தது. டிசம்பர் 8 இல் நியூசிலாந்தின் பிளஃப் என்ற இடத்தில் இருந்து அண்டார்க்டிக்கா நோக்கி அறிவியலாளர்கள், தேடலாய்வாளர்கள், சுற்றுலாப் பயணிகள், ஊடகவியலாளர்கள், மற்றும் பணியாளர்கள் உட்பட 74 பேர்களுடன் புறப்பட்டது. டிசம்பர் 25 இல் அண்டார்க்டிக்கா கரையில் இருந்து சில மைல்கள் தூரத்தில் அது பனிக்கட்டிகளூடே சிக்கிக் கொண்டது.


இக்கப்பலை மீட்பதற்காக பிரான்சு, மற்றும் சீனாவின் பனியுடைப்புக் கப்பல்கள் அனுப்பப்பட்டன. ஆனாலும் அவற்றால் உருசியக் கப்பலை அணுக முடியவில்லை. தற்போது ஆத்திரேலியப் பனியுடைப்புக் கப்பல் அங்கு சென்றுள்ளது.


101 ஆண்டுகளுக்கு முன்னர் ஆத்திரேலியாவில் இருந்து அண்டார்க்டிக்காவுக்குச் சென்ற டக்லசு மோசன் என்பவரின் பிரசித்தி பெற்ற பயணப் பாதை வழியே அக்காதெமிக் சொக்கால்ஸ்கி கப்பலும் செல்லவிருந்தது. இப்பயணத்திற்காக சுற்றுலாப் பயணிகள் ஒவ்வொருவரிடமும் இருந்து $15,000 பணம் அறவிடப்பட்டது.


மூலம்[தொகு]