உள்ளடக்கத்துக்குச் செல்

அண்டார்க்டிக்கா பனிப்பாறைகள் பெருகுகின்றன, உருகும் பனியே காரணம்

விக்கிசெய்தி இலிருந்து
அண்டார்க்டிக்காவில் இருந்து ஏனைய செய்திகள்
அண்டார்க்டிக்காவின் அமைவிடம்

அண்டார்க்டிக்காவின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

வியாழன், ஏப்பிரல் 18, 2013

காலநிலை மாற்றத்தால் உருகும் பனி அண்டார்க்டிக்கா கடலின் பனிப்பாறைகளை மேலும் அதிகப்படுத்துவதாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இது குறித்த ஆய்வு நேச்சர் ஆய்விதழில் வெளிவந்துள்ளது.


உலகம் வெப்பமயமாதலால் பெருங்கடல் வெப்பமடைகிறது. இந்த வெப்பத்தை, பெருங்கடல் நீரோட்டமானது அண்டார்க்டிக்கா பனிப்பிரதேசத்திற்கு இட்டுச்செல்கிறது. வெப்பம் அண்டார்க்டிக்கா பனிப்பாறைகளின் கீழ்பகுதியை உருக்கி, மேற்பகுதியில் உள்ள பனிக் கட்டிகளை மிதக்கச் செய்கிறது. பனிப்பாறைகள் உருகுவதால், கடல் மட்டம் உயரும் என்று எண்ணியிருந்த அறிவியலாளர்களுக்கு, அன்டார்டிக்காவில் பனிப்பாறையின் அளவு 1985 ஆம் ஆண்டில் இருந்து ஒரு பத்தாண்டிற்கு 1.9 விழுக்காடாக அதிகரித்துள்ளது வியப்பை அளித்தது. அதே வேளையில், ஆர்க்டிக் பகுதியில் பனிப்பாறைகள் தொடர்ந்து குறைந்து கொண்டே போகிறது.


அண்டார்க்ட்டிக் கடலின் பனிப்படி அடுக்குகளின் கீழ் பனி உருகுவதனால் உருவாகும் நன்னீர் ஒப்பீட்டளவில் குளிரானதாக இருப்பதே இந்த முரண்பாடான நிகழ்வுக்குக் காரணம் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இந்த உருகும் நீர் உப்பு நீரைக் காட்டிலும் குறைந்த அடர்த்தியைக் கொண்டிருப்பதால் அது பெருங்கடலின் மேற்படையிலேயே சேமிக்கப்படுகிறது. இந்தக் குளிரான நீர் பின்னர் கூதிர், குளிர் காலங்களில் இலகுவாக மீளவும் உறைகிறது.


குளிர் காலங்களில் பனிப்பாறைகள் அதிகரிப்பதற்கு இதுவே காரணம் என ரோயல் நெதர்லாந்து வானிலையியல் கழக அறிவியலாளர் குழு தெரிவித்துள்ளது. இந்நிலை எதிர்காலத்திலும் தொடர்ந்து இருக்கும் என அக்குழுவினர் கூறுகிறார்கள்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]