அண்டார்க்டிக்காவில் பிரேசில் ஆய்வு நிலையத்தில் தீ, இருவர் உயிரிழப்பு
- 8 சனவரி 2014: அண்டார்க்டிக்கா பனிக்கடலில் சிக்கிய உருசியக் கப்பல் மீண்டது
- 3 சனவரி 2014: அண்டார்க்டிக்காவில் சிக்கிய உருசியக் கப்பல் பயணிகள் 52 பேரும் மீட்கப்பட்டனர்
- 29 திசம்பர் 2013: அண்டார்க்டிக்காவில் சிக்கிய உருசியக் கப்பலை மீட்க ஆத்திரேலிய பனி உடைப்புக் கப்பல் விரைகிறது
- 18 ஏப்பிரல் 2013: அண்டார்க்டிக்கா பனிப்பாறைகள் பெருகுகின்றன, உருகும் பனியே காரணம்
- 17 செப்டெம்பர் 2012: அண்டார்க்டிக்காவில் நடைப்பயணம் மேற்கொண்டு உலக சாதனை நிகழ்த்த சர் ரானுல்ஃப் பைன்சு திட்டம்
ஞாயிறு, பெப்பிரவரி 26, 2012
அண்டார்க்டிக்காவில் உள்ள பிரேசில் நாட்டின் ஆய்வு நிலையம் ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டதில் இரண்டு பாதுகாப்புப் படையினர் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்தும் உள்ளார் என்று பிரேசிலின் இராணுவ வட்டாரம் அறிவித்துள்ளது.
அண்டார்க்டிக் தீபகற்பத்தின் உச்சிக்கு அருகில் கிங் ஜார்ஜ் தீவில் உள்ள கொமந்தாண்ட் பெரசு தளத்தில் இயந்திர அறை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தே இந்த வெடிப்புக்குக் காரணம் எனக் கூறப்பட்டுள்ளது. ஆய்வு நிலையம் முழுவதும் தீயில் சேதமடைந்து விட்டதாகவும், தீ இன்னமும் அணைக்கப்படவில்லை என்றும் பிரேசில் கடற்படை தெரிவித்துள்ளது. 44 பேர் அருகில் உள்ள சிலி நாட்டு ஆய்வு நிலையத்துக்கு வெளியேற்றப்பட்டனர்.
கரையோர மற்றும் கடற்பகுதியில் சூழ்மண்டலத்தை இந்த ஆய்வு நிலையத்தில் உள்ள அறிவியலாளர்கள் ஆராய்ச்சி செய்து வந்தனர். நேற்று சனிக்கிழமை காலையில் தீ விபத்து ஏற்பட்ட போது அங்கு கிட்டத்தட்ட 60 பேர் தங்கியிருந்தனர்.
தீயை அணைப்பதற்கு முயன்ற இரண்டு பாதுகாப்புப் படையினர் காணாமல் போயினர். இவர்களின் இறந்த உடல்கள் பின்னர் மீட்கப்பட்டன. காயமடைந்த இராணுவத்தினர் ஒருவர் போலந்து நாட்டின் ஆர்க்தோவ்ஸ்க்கி நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இத் தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மூலம்
[தொகு]- Two missing as fire guts Brazil's Antarctic research station, பிபிசி, பெப்ரவரி 25, 2012
- Fire breaks out in Brazilian Antarctic base, டென்வர் போஸ்ட், பெப்ரவரி 25, 2012