உள்ளடக்கத்துக்குச் செல்

அமெரிக்காவின் கிழக்குக் கரையில் கடும் நிலநடுக்கம்

Checked
விக்கிசெய்தி இலிருந்து
(அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் நிலநடுக்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வியாழன், ஆகத்து 25, 2011

ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் நேற்று முன்தினம் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வர்ஜீனியா மாநிலத்தின் ரிச்மண்டின் வடமேற்கே 64 கிலோ மீட்டரில் மையம் கொண்டிருந்த இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 எனப் பதிவானதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்தது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.


கிழக்குக் கரையில் இன்று அதிகாலை 01:07 மணிக்கு 4.5 அளவு நிலநடுக்கம் பதியப்பட்டுள்ளது. வெர்ஜீனியாவின் மினரல் நகருக்கு தெற்கே 8 கிமீ தூரத்தில் இது மையம் கொண்டிருந்தது.


செவ்வாய்க்கிழமை நிலநடுக்கத்தின் எதிரொலி, வாசிங்டனிலும் இருந்தது. பல இடங்களில் கட்டடங்கள் குலுங்கின. இதனால், நாடாளுமன்றக் கட்டடம், வெள்ளை மாளிகை, "பென்டகன்' ஆகியவற்றில் இருந்த அலுவலர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். வாசிங்டனில் உள்ள தேசிய சர்ச்சின் உச்சியில் உள்ள நான்கு கோபுரங்களில் ஒரு கோபுரத்தின் உச்சிப் பகுதி, நிலநடுக்கத்தில் உடைந்து விழுந்தது.


நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் வடக்கு மின் நிலையத்தில் உள்ள 2 அணு உலைகள் தானாகவே செயல்பாட்டை நிறுத்திக்கொண்டன என அமெரிக்க அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய செய்தித் தொடர்பாளர் ரொஜர் ஹன்னா தெரிவித்தார். மொத்தமாக அப்பகுதியில் இயங்கி வரும் 12 அணுமின் உலைகள், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. நியூயார்க், நியூஜெர்சி, பென்சில்வேனியா, மேரிலேண்ட் பகுதிகளில் உள்ள அணுமின் நிலையங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அணுமின் நிலைய ஒழுங்கு முறை ஆணையம் தெரிவித்துள்ளது.


சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுதான் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது ஏனெனில் வாஷிங்டன் பகுதியில் கடந்த 1897 ஆம் ஆண்டு மே மாதம் 5.9 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. தற்போது 110 ஆண்டுக்கு பிறகுதான் இதுபோன்று உருவாகியுள்ளது.


மூலம்

[தொகு]