உள்ளடக்கத்துக்குச் செல்

அமெரிக்க அதிபர் தன் 2018 ஆண்டுக்கான முதல் கீச்சில் பாகித்தானை தாக்கியுள்ளார்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சனவரி 2, 2018

பாக்கித்தான் கடந்த 15 ஆண்டுகளாக அமெரிக்காவிடமிருந்து, பல பில்லியன் டாலர்களை உதவியாக பெற்றபோதிலும் பாகித்தான் அமெரிக்காவிடம் தொடர்ந்து பொய் கூறுவதாக அமெரிக்க அதிபர் திரம்பு தன் 2018 ஆண்டுக்கான முதல் கீச்சில் பாகித்தானை குறை கூறியுள்ளார். மேலும் ஆப்கானித்தானில் தாங்கள் வேட்டையாடும் தீவிரவாதிகளுக்கு பாக்கித்தான் புகலிடம் அளிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.


திரம்பின் கருத்தை மறுத்துள்ள பாக்கித்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அசிப் இது குறித்து ஜியோ தொக்காவிடம் பேசியபோது , "இதற்கு மேல் நாங்கள் எதுவும் செய்யமாட்டோம் என்று அமெரிக்காவிடம் ஏற்கனவே தெரிவித்துவிட்டோம். அதனால், அவர்கள் குறிப்பிட்டுள்ள, `நோ மோர்` என்ற வார்த்தைகளுக்கு முக்கியதுவம் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.


"அமெரிக்கா அளித்த உதவித்தொகை குறித்த அனைத்து விவரங்களையும் பொதுவெளியில் அளிக்க பாக்கித்தான் தயாராக உள்ளது"` என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


திரம்பின் பதிவிற்கு எதிரான கருத்தை தெரியப்படுத்துவதற்காக, பாக்கித்தானிற்கான அமெரிக்க தூதர் டேவிட், திங்கட்கிழமையன்று வெளியுறவுத்துறை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள, பாக்கித்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர், குர்ராம், "அமெரிக்கா, பாக்கித்தானிற்கு கடுஞ்சொற்களையும், அவநம்பிக்கையையுமே" அளித்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.


ஆஃப்கானித்தானில், தாலிபனுக்கு ஆதரவாக பாக்கித்தான் செயல்படுவதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரான டில்லர்சன் அழுத்தமளித்திருந்தார். "பாக்கித்தானில் பாதுகாப்பான புகலிடம் தேடும், பல பயங்கரவாத இயக்கங்களை கையாள்வது குறித்து, பாக்கித்தானின் அணுகுமுறையில் மாற்றம் இல்லை என்றால், அமெரிக்காவின் உதவித்தொகை குறித்த விவகாரங்கள் மீண்டும், பேச்சுவார்த்தைக்கு எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்திருந்தார்.


தாலிபனுடன் கூட்டணியில் உள்ள அக்குவனி குழுவிற்கு எதிராக பாக்கித்தான் அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற குற்றசாட்டிற்காக, பாக்கித்தானிற்கு வந்துசேரவேண்டிய, பல பில்லியன் டாலர் உதவித்தொகை அமெரிக்காவிலேயே தேக்கி வைக்கப்பட்டுள்ளது.


பயங்கரவாதிகளால், பிடித்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்க பிணைக்கைதி குறித்து தகவல்கள் அளிக்கும் திறன் உள்ளதாக, அமெரிக்கா நம்பிய ஒரு நபருடன், அந்நாட்டு அதிகாரிகள் பேசுவதற்கு பாக்கித்தானால் அனுமதி மறுக்கப்பட்டது என்று தி நியூயார்க் டைம்சு நாளேடு தெரிவிக்கிறது.


திரம்பின் பதிவை, ஆஃப்கானின் முன்னாள் அதிபரான அமீத் கர்சாயும், அமெரிக்காவிற்கான ஆஃப்கான் தூதரான அம்துல்லா மொகிபும் வரவேற்றுள்ளனர்.

மூலம்

[தொகு]