வரவு செலவு திட்டம் மேலவையில் தோல்வியடைந்ததால் அமெரிக்காவில் அரசுப் பணிகள் நிறுத்தம்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சனவரி 20, 2018

அமெரிக்காவில் புதிய வரவு செலவுத் திட்டத்தை செனட் சபை எனப்படும் மேலவை ஏற்றுக்கொள்வது தோல்வியடைந்ததால் அரசு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றம்

கடைசி நிமிடம் வரை இருகட்சி கூட்டம் நடந்தபோதிலும், அரசுக்கு பிப்ரவரி 16-ம் தேதி வரை நிதியளிக்கும் இந்த மசோதா, தேவையான 60 ஓட்டுகளைப் பெறவில்லை.


குடியரசுக் கட்சியே கீழவையான காங்கிரசில் (நாடாளுமன்றம்) பெரும்பாண்மை வகிக்கும் நிலையில், அதே கட்சியைச் சேர்ந்தவரே அதிபராகவும் உள்ள நிலையில் வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளது.


பொறுப்பற்ற கோரிக்கைகளுக்காக சனநாயக கட்சியினர் குடிமக்களை பணையக்கைதிகளாக வைத்துள்ளதாக வெள்ளை மாளிகை குற்றஞ்சாட்டியுள்ளது.

அமெரிக்க அதிபர் திரம்பு

'தேசியப் பாதுகாப்பு, ராணுவ குடும்பங்கள், பாதிக்கப்படும் குழந்தைகள், எல்லா அமெரிக்கர்களுக்கும் சேவை செய்வதற்கான நமது நாட்டின் திறன் ஆகியவற்றுக்கும் மேலாக இவர்கள் தங்களது அரசியலை வைத்துள்ளனர் என வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்சு கூறியுள்ளார்.


இரண்டு முறை இரு கட்சி சமரச உடன்பாடுகளை அதிபர் திரம்ப் மறு நிராகரித்ததாகவும், நாடாளுமன்றத்தில் தன் கட்சிக்கு அழுத்தம் தரவில்லை என்றும் ஜனநாயக கட்சியின் மேலவை தலைவர் சக் இசுகுமர் கூறியுள்ளார்.


கடந்த முறை இது போல அரசுப் பணிகள் நிறுத்தப்பட்ட நிகழ்வு 2013ல் 16 நாள்கள் நடந்தது.


அடுத்த மாதம் வரை நிதி அளிப்பதை நீட்டிக்க பிரதிநிதிகள் அவையில் 230 வாக்குகள் ஆதரவாகவும் 197 வாக்குகள் எதிராகவும் பதிவானது. ஆனால், மேலவையில் 50 வாக்குகள் எதிராகவும் 49 வாக்குகள் ஆதரவாகவும் இருந்ததால் அங்கு மசோதா தோல்வியை சந்தித்தது.


எதிர்க்கட்சியான சனநாயக கட்சியை சேர்ந்த ஐந்து உறுப்பினர்கள் தங்கள் அணியை உடைத்துவிட்டு இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த போதிலும், திரம்பின் கட்சியை சேர்ந்த ஐந்து குடியரசு உறுப்பினர்கள் இதற்கு எதிராக வாக்களித்தனர்.

சக் இசுமர் (சனநாயக கட்சி மேலவை தலைவர்)

நாடாளுமன்றம் நிதி ஒதுக்கவில்லை என்றால், அரசு நிறுவனங்களை மூட வேண்டும் என்ற அமெரிக்க சட்டத்தின்படி பல அரசு அலுவலகங்கள் மூடப்படும்.


தேசிய பூங்காக்கள் மற்றும் நினைவுச் சின்னங்களும் மூடப்படலாம், மூடப்பட்டால் அங்கு பொதுமக்கள் யாரும் செல்ல முடியாது .அமெரிக்கா வரும் வெளிநாட்டினருக்கான நுழைவுச்சீட்டு ( விசா ) மற்றும் கடவுச்சீட்டு நடைமுறைகள் இதனால் தாமதமாகும்.


ஆனாலும், அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து இயங்கும். தேசியப் பாதுகாப்பு, தபால் சேவைகள், வானூர்தி போக்குவரத்து கட்டுப்பாடு, மருத்துவ சேவை, சிறைச்சாலைகள், வரிவிதிப்பு மற்றும் மின்சார உற்பத்தி போன்ற சேவைகள் தொடர்ந்து இயங்கும்.


வாக்கெடுப்புக்கு சில மணி நேரத்திற்கு முன்பு அதிபர் திரம்ப் நம்பிக்கையற்ற வகையில் இருந்தார்.


கடைசிக் கட்ட பேச்சுவார்த்தைக்காக சனநாயக கட்சியின் மேலவை தலைவரை அதிபர் திரம்ப் வெள்ளை மாளிகைக்கு அழைத்தார். ஆனால், அவர்களால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை

மூலம்[தொகு]