அமெரிக்க சுதந்திரதேவி சிலையைப் போல் மதுரையில் தமிழ்த்தாய் சிலை, ஜெயலலிதா அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மே 14, 2013

ரூ.100 கோடி செலவில் மதுரையில் தமிழ்த்தாய் சிலை நிறுவப்படும் என சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார்.


தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: "பெருமை வாய்ந்த தமிழ் மொழியை சிறப்பிக்கும் வண்ணம், அமெரிக்க நாட்டின் பெருமையையும் புகழையும் உலகளவில் பரப்பும் வகையில் அமைந்துள்ள சுதந்திர தேவி சிலையைப் போல, தமிழர்களின் நாகரிகம், பண்பாடு, இலக்கியச் செல்வங்கள், கட்டிடக் கலைத்திறன் ஆகியவற்றை உலகிற்கு எடுத்துக் காட்டும் வகையில், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்த் தாய் சிலை அமைக்கப்படும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், ஐவகை நிலங்களான குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை ஆகியவற்றின் மாதிரிகளை உருவாக்கி தமிழர்களின் தொன்மைச் சான்றுகளாய் விளங்கும் சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள மரம், செடி, கொடிகளுடன் தமிழ்த் தாய்ப் பூங்கா ஒன்றும் அங்கு உருவாக்கப்படும்" என்றார்.


தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆண்டுதோறும் அயல் நாட்டு மொழிகளில் தமிழ் இலக்கியங்களை மொழி பெயர்க்கும் சிறந்த தமிழ் மொழி பெயர்ப்பாளர் ஒருவருக்கு ஜி.யு.போப் விருது வழங்கப்படும் எனவும் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஒரு லட்சம் ரூபாய், தங்கப் பதக்கம், தகுதியுரை, பொன்னாடை ஆகியவை வழங்கப்படும். இந்த விருது சித்திரைத் திருநாள் அன்று வழங்கப்படும்.


சீறாப் புராணத்தை இயற்றிய உமறுப் புலவர் தமிழுக்கு ஆற்றிய அருந்தொண்டை போற்றும் வகையில், தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் தொண்டாற்றி வரும் தமிழ் அறிஞர் ஒருவருக்கு உமறுப் புலவர் பெயரில் விருது வழங்கப்படும். பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பச் சூழ்நிலைகளையும், தற்போதைய காலச் சூழ்நிலையையும், கருத்தில் கொண்டு, பத்திரிகையாளர்களின் மாதாந்திர ஓய்வூதியத் தொகை 6 ஆயிரத்தில் இருந்து 7,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். பத்திரிகையாளரின் மனைவிக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் 3,000 ரூபாயில் இருந்து 4,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.


மூலம்[தொகு]