உள்ளடக்கத்துக்குச் செல்

அமெரிக்க மருத்துவர் ஜெயந்த் பட்டேலுக்கு ஆஸ்திரேலியாவில் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சூலை 1, 2010


ஆஸ்திரேலியாவில் பணி புரியும் போது மூன்று நோயாளிகளின் இறப்பிற்குக் காரணமாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அமெரிக்க சத்திரசிகிச்சை நிபுணர் ஜெயந்த் பட்டேலுக்கு இன்று ஆஸ்திரேலிய நீதிமன்றம் ஒன்று 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.


இந்தியாவில் குஜராத்தில் பிறந்து அங்கேயே பயிற்சி பெற்ற அமெரிக்க குடியுரிமை பெற்ற மருத்துவர் ஜெயந்த் பட்டேல் (அகவை 60) 2003 - 2005 காலப்பகுதியில் குயின்ஸ்லாந்து மாநில மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்தார். இவர் ஆஸ்திரேலிய ஊடகங்களினால் "Dr Death" என வருணிக்கப்படுகிறார்.


மூன்று கொலைகள், மற்றும் ஒருவருக்கு உடல் ரீதியாகத் தீங்கு விளைவித்தமை போன்ற குற்றங்களுக்காக கடந்த திங்கள் அன்று இவரை பிறிஸ்பேன் உச்சநீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்திருந்தது.


நோயாளி ஒருவரின் குடலை எவ்விதக் காரணமும் இன்றி அகற்றியிருந்தார். வேறொரு நோயாளி உள் இரத்த வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தத் தவறியமையால் அந்த நோயாளி இறந்துள்ளார்.


வேறொரு நோயாளிக்கு பட்டேல் தொண்டையில் சத்திரசிகிச்சை மேற்கொண்டார். இம்மாதிரியான சிகிச்சை பொதுவாக பண்டபேர்க் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. அதற்கான வசதிகளை அம்மருத்துவமனை கொண்டிருக்கவில்லை. அந்நோயாளி இரண்டு நாட்களில் உயிரிழந்தார்.


இவரது திறமையின்மையை அறிந்த அந்த மருத்துவமனையின் தாதிகள் நோயாளிகளை பட்டேலிடம் அனுப்புவதைத் தவிர்த்தனர் என நீதிமன்றத்தில் கூறப்பட்டது.


1980களில் பட்டேல் அமெரிக்காவில் பணியாற்றும் போது அவரது திறமையின்மை குறித்து குற்றச்சாட்டுக்கள் கிளம்பின. 1984 ஆம் ஆண்டில் நியூயோர்க்கில் அவருக்குத் தண்டம் அறவிடப்பட்டு மூன்றாண்டுகள் சத்திரசிகிச்சைகள் மேற்கொள்வது தடை செய்யப்பட்டது.


இந்த வழக்கிற்காக குயின்ஸ்லாந்து மாநில சுகாதாரத் துறை அமைச்சு பல மில்லியன் டாலர்களைச் செலவழித்துள்ளதாகக் கூறப்பட்டது.


குயின்ஸ்லாந்து மாநில சட்டப்படி மூன்றரை ஆண்டு சிறைவாசத்தின் பின்னர் பட்டேல் நன்னடத்தைப் பிணையில் விடுவிப்பதற்கு விண்ணப்பிக்கலாம் என நீதிமன்றம் அறிவித்தது.

தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]