உள்ளடக்கத்துக்குச் செல்

அரபு நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து சிரியா இடைநிறுத்தம்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், நவம்பர் 14, 2011

அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களின் மீது வன்முறை பிரயோகிப்பதை சிரிய அரசு முடிவுக்குக் கொண்டு வரத் தவறியமை காரணமாக அந்நாட்டைத் தமது அமைப்பில் இருந்து இடைநிறுத்தி வைப்பதற்கு அரபு நாடுகளின் கூட்டமைப்பு (அரபு லீக்) முடிவு செய்துள்ளது.


இத்தீர்மானத்தை "ஒரு பயங்கரமான முடிவு' என வர்ணித்திருக்கும் சிரிய வெளியுறவுத்துறை அமைச்சர் வாலித் அல்-முவால்லம், "கூட்டமைப்பு அமெரிக்காவின் நிகழ்ச்சித் திட்டத்திற்கமைய செயல்பட்டு வருவதையே காட்டுகிறது" எனக் கூறினார்.


கடந்த சனிக்கிழமை அன்று இந்த இடைநிறுத்தல் அறிவிப்பை அரபு நாடுகளின் கூட்டமைப்பு வெளியிட்டது.


சிரியாவுக்கு எதிராகத் தடைகள் விதிப்பது தொடர்பாக ஐரோப்பிய நாடுகள் பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்சில் கூடி உரையாடி வருகின்றனர். முக்கியமாக ஐரோப்பிய முதலீட்டு வங்கியில் இருந்து சிரியா உதவி பெறுவதைத் தடை செய்ய ஐரோப்பிய நாடுகள் முயற்சித்து வருகின்றன.


சிரிய மக்களுக்குப் பாதுகாப்புத் தரும் நேரம் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ள பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர், இது குறித்து ஐக்கிய நாடுகள் கடுமையான நிலையை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.


அரபுக் கூட்டமைப்பின் முடிவுக்கு அமெரிக்கத் தலைவர் அபராக் ஒபாமா பாராட்டுத் தெரிவித்துள்ளார். சிரிய ஆட்சியாளர்களின் வன்முறைகளை எதிர்கொள்ள அந்நாட்டு பக்களுக்கு ஆதரவு வழங்கப் போவதாக அவர் கூறியுள்ளார்.


ஹோம்ஸ் நகரில் கடந்த சனியன்று நடந்த வன்முறைகளில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.


மூலம்[தொகு]