உள்ளடக்கத்துக்குச் செல்

அருணாச்சலப் பிரதேசத்தில் கோரோ என்ற புதிய மொழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், அக்டோபர் 6, 2010

இந்தியாவின் பின்தங்கிய பகுதி ஒன்றில் அறிவியலுக்குப் புதிய மொழி ஒன்று பேசப்படுவதை மொழியியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


அருணாச்சலப் பிரதேசம்

கோரோ என்றழைக்கப்படும் இம்மொழி எந்த மொழிக்குடும்பத்தோடும் சேர்க்கப்பட முடியாத மொழியாக உள்ளது. ஆனாலும் இம்மொழி இப்போது அழியும் தறுவாயில் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் மொழியியலாளர் குழு ஒன்று கோரோ என்ற இம்மொழி பேசுபவர்களைக் கண்டுபிடித்துள்ளார்கள்.


"நசனல் ஜியோகிரபிக்" ஆய்வுக் குழுவினர் ஒரு சிறிய பகுதி ஒன்றில் வேறு இரண்டு மொழி பேசும் மக்களைக் கண்டுபிடிப்பதற்காக அப்பகுதிக்குச் சென்றனர். அப்போதே இந்த அரிய மூன்றாவது மொழியைக் கண்டுபிடித்தனர். இது ஒரு புதிய முன்னெப்போதும் எவரும் கண்டுபிடிக்கப்படாத மொழியாக இருந்தது.


ஆயிரக்கணக்கான சொற்களை டேவிட் ஹரிசன் என்பவரின் தலைமையில் சென்ற ஆய்வுக் குழு கண்டுபிடித்துள்ளனர். இப்பகுதியில் உள்ள ஏனைய மொழிகளிடம் இருந்தும் கோரோ மொழி பெரிதும் வேறுபடுவதை அவர்கள் அறிந்தனர்.


திபெத்திய-பர்மிய மொழிக் குடும்பத்தைல் இதுவும் உள்ளது. இந்தியாவில் இம்மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த 150 மொழிகள் புழக்கத்தில் உள்ளன. ஆனாலும் இம்மொழிக் குடும்பத்தில் கோரோ மொழியை ஒத்த வேறு மொழிகள் இல்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.


இம்மொழி எப்போது எழுதப்பட்டிருக்கவில்லை என்றும் இப்போது 800 இற்கும் 1,200 இற்கும் இடைப்பட்டோரே இம்மொழியைப் பேசுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.


இம்மொழி பற்றி மேலும் ஆராய்வதற்காக இவ்வாய்வுக்குழு அடுத்த மாதம் அளவில் இப்பகுதிக்கு செல்லவிருக்கின்றது என அக்குழுவின் தலைவர் தெரிவித்தார். இம்மொழி எங்கிருந்து உருவானது என்பது பற்றியும் எவ்வாறு இம்மொழி இவ்வளவு காலமும் வெளியில் வராமல் இருந்தது என்பது குறித்தும் அவர்கள் மேலும் ஆராயவிருக்கிறார்கள்.


மூலம்