உள்ளடக்கத்துக்குச் செல்

அருணாச்சலப் பிரதேச முதல்வருடன் சென்ற உலங்குவானூர்தி காணாமல் போனது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மே 2, 2011

நேற்று முன்தினம் காலை 9.45 மணிக்கு இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் நகரில் இருந்து அருணாச்சலப் பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டுவுடன் சென்ற பவன் ஹான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த உலங்குவானூர்தி காணாமல் போயுள்ளது. அதில் பயணித்த முதல்வர் உட்பட 5 பேரின் கதியும் என்ன என்பது தெரியவில்லை.


அருணாச்சலப் பிரதேச முதல்வர் டோர்ச்சி காண்டு

இந்த உலங்குவானூர்தி 11.30 மணிக்கு தலைநகர் இடாநகருக்கு சென்று சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் புறப்பட்ட 20 நிமிடங்களில் அதனுடனான தொடர்புகள் அறுந்துபோனது. இதனால் அது விபத்துக்குள்ளானதாக அஞ்சப்பட்டு அதை தேடும் பணியில் விமானப் படை உலங்குவானூர்திகள் ஈடுபடுத்தப்பட்டன.


முதல்வர் சென்ற உலங்குவானூர்தி விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனைக் கண்டுபிடிக்கும் பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் அவர்களால் எளிதாக முன்னேற முடியவில்லை. ஒரு வாரத்துக்கு தேவையான உணவு பொருட்களுடன் அவர்கள் காட்டுக்குள் சென்றுள்ளனர். அடுத்த 2 நாளுக்கு அருணாச்சலில் 50 கி.மீ வேகத்தில் சூறை காற்று வீசும், கனமழையும் பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளதால், தேடும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


இராணுவத்தின் உளவுப் பிரிவில் பணியாற்றிய டோர்ஜி காண்டு, வங்கதேசப் போரின்போது முக்கியப் பணியாற்றியவர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். சீனாவின் கடும் எதிர்ப்புகளையும் மீறி, தலாய் லாமாவை தவாங் பகுதிக்கு சில மாதங்களுக்கு முன்பு அழைத்து வந்தார் முதல் முறையாக 2007ம் ஆண்டு முதல்வராகப் பதவியேற்றார். கெகாங் அபாங் பதவி துறந்தததைத் தொடர்ந்து டோர்ஜி முதல்வரானார். பின்னர் 2009ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 2வது முறையாக முதல்வர் ஆனார்.


கடந்த வாரம் அருணாச்சலப் பிரதேசத்தில் 23 பேருடன் சென்ற உலங்குவானூர்தி ஒன்று விபத்தில் சிக்கியதில் அதில் பயணம் செய்த இரு குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.


மூலம்

[தொகு]