அலைக்கற்றை ஊழல்: கனிமொழியின் பிணை மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சூன் 21, 2011

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை (2ஜி) ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரருமான கனிமொழி, மற்றும் கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோர் தாக்கல் செய்த பிணை மனுவைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர்கள் இருவரும் பிணை கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளது.


இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்படுவது சூலை 2-வது வாரத்தில் இருந்து தொடங்கும் என்று தெரிகிறது. அதில் கனிமொழி மீது ஆகத்து முதல் வாரத்தில் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்படலாம். எனவே கனிமொழி இன்னும் 45 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்க வேண்டியிருக்கும் என்று தில்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


முன்னதாக இருவரும் தாக்கல் செய்திருந்த பிணை மனுக்களை விசாரிப்பதில் இருந்து நீதிபதிகள் பி.சதாசிவம், ஏ.கே.பட்நாயக் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை விலகுவதாக அறிவித்தனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கை கண்காணித்து வந்த நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, பி.எஸ்.சௌகான் ஆகியோர் அடங்கிய அமர்வு, கனிமொழியின் பிணை மனுவை இன்று விசாரித்த போது தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]