உள்ளடக்கத்துக்குச் செல்

அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடுகள் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, பெப்பிரவரி 11, 2011

இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தை விசாரிக்க ஒரு சிறப்பு நீதிமன்றத்தை அமைக்குமாறு இந்திய உச்ச நீதிமன்றம் நேற்று வியாழனன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தால் பலனடைந்த மற்றவர்களையும் விசாரிக்குமாறும் சிபிஐக்கும், மற்ற விசாரணை அமைப்புகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.


இந்த வழக்கை மத்திய புலனாய்வு நிறுவனம் சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அதன் விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை கடந்த டிசம்பர் 16ம் தேதி விசாரித்த நீதிபதிகள் நடுவண் புலனாய்வு நிறுவனம், மற்றும் விசாரணை அமைப்புகள் உரிய முறையில் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்றும், விசாரணையின் விவரங்களை பிப்ரவரி 10ம் தேதி சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு ஆகியவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


இந்த உத்தரவுக்குப் பின்னரே மத்திய புலனாய்வு நிறுவனம் தனது விசாரணையை தீவிரப்படுத்தி தொலைத்தொடர்புத்துறை முன்னாள்-இன்னாள் அதிகாரிகள், தொழிலதிபர்களின் வீடுகள், அலுவலகங்களில் திடீர்ச்சோதனைகளை நடத்தியது. இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆ. ராசா உட்பட அதிகாரிகள் சந்தோலியா, பெகுரியா, ஸ்வான் டெலிகாம் அதிபர் உஸ்மான் ஆகியோரைக் கைது செய்தது.


கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் மற்றும் திடீர்ச்சோதனைகளின் போது கிடைத்த தகவல்கள், இந்த சர்ச்சைக்குரிய ஒதுக்கீடுகளால் அரசுக்கு எவ்வளவு வருவாய் இழப்பு, எந்த நிறுவனங்கள் இதில் பயனடைந்தார்கள் போன்ற தகவல்களை நேற்று வியாழனன்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய புலனாய்வு நிறுவனம் தாக்கல் செய்தது. விசாரணைகள் மீண்டும் மார்ச் முதல் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன.


இந் நிலையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. அவர் விசாரணை நடத்தி 143 பக்க அறிக்கையை மத்திய அமைச்சர் கபில் சிபலிடம் தாக்கல் செய்தார்.அந்த அறிக்கையில் விவரம் வெளியாகி உள்ளது. அதில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஏலம் விடாமல் முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு கொடுத்தது தவறு. இதில் வெளிப்படையான தன்மை இருந்திருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.


மூலம்

[தொகு]