உள்ளடக்கத்துக்குச் செல்

அல்ஜீரியாவில் இசுலாமியப் போராளிகளால் வெளிநாட்டுப் பணயக் கைதிகள் சிறைப்பிடிப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சனவரி 18, 2013

அல்ஜீரியாவில் சகாரா பாலைவனம் பகுதியில் உள்ள ஒரு எரிவாயுத் தொழிற்சாலையில் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டவர்களில் சிலர் மீட்கப்பட்டுள்ளரெனினும், பலர் இன்னும் விடுவிக்கப்படாதுள்ளனர் எனப் பிரித்தானியா கூறியுள்ளது.


அல்ஜீரியாவின் அமனாஸ் என்ற இடத்தில் எரிவாயு ஆலையை ஆயுதம் தாங்கிய போராளிகள் கடந்த புதன்கிழமை அன்று கைப்பற்றினர். தம்மிடம் 41 வெளிநாட்டவர் பணயக் கைதிகளாகப் பிடிபட்டுள்ளனர் என போராளிகள் அறிவித்துள்ளனர். பேருந்து ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பிரித்தானியா, மற்றும் அல்ஜீரிய நாட்டவர் இருவர் கொல்லப்பட்டனர்.


வியாழனன்று இவர்களை விடுவிக்க அல்ஜீரியத் துருப்புகள் முயன்றபோது பணயக் கைதிகள் சிலர் கொல்லப்பட்டிருந்தனர். நால்வர் மட்டும் விடுவிக்கப்பட்டனர். ஏனையோருக்கு என்ன நடந்தது என்பது தெரிய வரவில்லை. இரண்டு பிரித்தானியரும், இரண்டு பிலிப்பீனோக்களும் இறந்துள்ளதாக உள்ளூர் ஊடகம் ஒன்று அறிவித்துள்ளது.


நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் 35 வெளிநாட்டவரும் 15 போராளிகளும் உயிரிழந்ததாக போராளிகளின் பேச்சாளர் தெரிவித்ததாக மவுரித்தேனியாவின் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் அறிவித்திருந்தது.


பிடித்துவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டினரை விடுவிக்க நடந்த தாக்குதல் முடிவுக்கு வந்துவிட்டது என்று அல்ஜீரிய அதிகாரிகள் வியாழனன்றே அறிவித்திருந்தாலும், ஆயுததாரிகள் பணயக் கைதிகளை பிடித்துவைத்துள்ள அந்த தொழிற்சாலையை சிறப்புப் படையினர் சுற்றி வளைத்துள்ள முற்றுகை நீடிக்கிறது என அல்ஜீரிய அரசு வானொலி கூறியுள்ளது.


முன்னதாக ஆயுததாரிகளின் அறிக்கையை மவுத்தேனியத் தொலைக்காட்சி ஒன்று வெளியிட்டிருந்தது. "மாலியில் இருக்கும் எமது மக்களுக்கு எதிரான பிரான்சின் தாக்குதல் நிறுத்தப்படும்வரை பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள்" என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மூலம்

[தொகு]