உள்ளடக்கத்துக்குச் செல்

ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் தலைமைப் பதவியில் இருந்து ரிக்கி பாண்டிங் விலகினார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மார்ச்சு 29, 2011

ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணித் தலைமைப் பொறுப்பில் இருந்து தாம் உடனடியாக விலகுவதாக அறிவித்துள்ள ரிக்கி பாண்டிங், தான் தொடர்ந்து ஆத்திரேலிய அணியில் விளையாடவிருப்பதாகக் கூறினார்.


ரிக்கி பாண்டிங்

2011 உலகக்கோப்பையின் காலிறுதில் இந்திய அணியினால் தோற்கடிகப்பட்டு நாடு திரும்பிய ஆத்திரேலிய அணியின் தலைவர், 36 வயதுள்ள ரிக்கி பாண்டிங் இன்று சிட்னியில் வைத்து தனது இந்த முடிவை அறிவித்துள்ளார்.


"தேர்வு, மற்றும் ஒருநாள் அணிகளின் தலைமைப் பொறுப்பில் இருந்து இன்றில் இருந்து விலகுகிறேன்," என செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.


தற்போது பதில் தலைவராக இருக்கும் மைக்கல் கிளார்க் அடுத்த தலைவராகத் தெரிவு செய்யப்படுவார் எனப் பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.


2002 ஆம் ஆண்டில் ஒருநாள் அணித் தலைவராகப் பொறுப்பேற்ற பாண்டிங், பின்னர் 2004 ஆம் ஆண்டில் ஸ்டீவ் வா இளைப்பாற தேர்வுத் துடுப்பாட்ட அணிக்கும் தலைவரானார். புள்ளித்தரவுகளின் அடிப்படையில் ஆத்திரேலிய அணியின் மிகவும் வெற்றிகரமான தலைவராக ரிக்கி பாண்டிங் கருதப்படுகிறார்.


இவரது தலைமையின் கீழ் ஆத்திரேலிய அணி 77 தேர்வுப் போட்டிகளில் 48 இல் வெற்றி பெற்றது. டிசம்பர் 2005 முதல் சனவரி 2008 வரை போட்டியிட்ட அனைத்து 16 போட்டிகளிலும் இவ்வணி வெற்றி பெற்றுள்ளது. 227 ஒரு நாள் போட்டிகளில் 163 இல் வெற்றி பெற்றுள்ளது. இதில் 2003 மற்றும் 2007 உலகக்கோப்பை வெற்றிகளும் அடங்கும்.


ஆனாலும் இவரது தலைமையில் மூன்று ஆஷசுத் தொடர்களின் இங்கிலாந்திடம் தோற்றிருப்பதும், நான்காவது உலககோப்பைக் கிண்ணத்தைத் தவறவிட்டதும் இவரது பதவிக்கு அண்மைக்காலத்தில் எதிர்ப்புக் கிளம்பியிருந்தது.


அடுத்த புதன்கிழமை அன்று புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. அடுத்த மாதம் வங்காளதேசத்துடன் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டித் தொடரை ஆத்திரேலிய அணி ஆரம்பிக்கிறது.


மூலம்

[தொகு]