ஆத்திரேலியத் தொழிற்கட்சித் தலைமைப் போட்டியில் ஜூலியா கிலார்ட் தோல்வி, பிரதமராக கெவின் ரட்

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சூன் 26, 2013

ஆஸ்திரேலியாவின் ஆளும் தொழிற்கட்சித் தலைவர் பதவிக்கு இன்று இடம்பெற்ற ஒரு திடீர் வாக்கெடுப்பில் பிரதமர் ஜூலியா கிலார்ட் தோல்வியைத் தழுவினார். முன்னாள் பிரதமர் கெவின் ரட் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் மீண்டும் பிரதமராகிறார்.


கெவின் ரட்
ஜூலியா கிலார்ட்

தலைமைப் பதவிக்கான போட்டியை இன்று அறிவித்த ஜூலியா கிலார்டுக்கு 45 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கெவின் ரட்டிற்கு 57 வாக்குகளும் கிடைத்தன.


எதிர்வரும் செப்டம்பரில் பொதுத்தேர்தல்கள் நடக்கவிருக்கும் நிலையில் இந்தத் திடீர்த் தலைமைப் போட்டி இடம்பெற்றது. பொதுக் கருத்துக் கணிப்பின் படி, எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஆளும் தொழிற் கட்சி பலத்த தோல்வியைத் தழுவும் எனக் கூறப்படுகிறது.


வாக்காளர்களிடையே ஜூலியா கிலார்டை விட கெவின் ரட்டுக்கு அதிக செல்வாக்கு இருப்பதால், வரும் தேர்தல்களில் அவரது தலைமையில் தொழிற்கட்சி சிறந்த பெறுபேறுகளைப் பெறும் என தொழிற்கட்சி வட்டாரங்கள் கருதுகின்றன. இதேவேளையில், ஜூலியா கிலார்டினால் அறிவிக்கப்பட்டுள்ள செப்டம்பர் மாதத்துக்கான பொதுத்தேர்தலை கெவின் ரட் ஆகத்து மாத இறுதியில் நடத்த விருப்பதாக இன்று அறிவித்துள்ளார்.


2010 சூன் 24 ஆம் நாள் அன்றைய பிரதமராக இருந்த கெவின் ரட்டை ஜூலியா கிலார்ட் இதே போன்றதொரு தலைமைக் கவிழ்ப்பு முயற்சியில் இறங்கி வெற்றி பெற்று ஆத்திரேலியாவின் முதல் பெண் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றில் இருந்து இன்றைய வாக்கெடுப்புக்கு முன்னர் இரண்டு தடவைகள் அவருக்கு எதிராக தலைமைப் பதவிக்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது. இரண்டு தடவையும் கெவின் ரட் தோற்றார்.


இன்றைய தோல்வியின் பின்னர் ஜூலியா கிலார்ட் அடுத்த பொதுத்தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை எனவும், அரசியலில் இருந்து ஓய்வெடுக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.


ஜூலியா கிலார்ட் முறைப்படி தமது பதவிவிலகல் கடிதத்தை ஆளுனருக்கு சமர்ப்பித்த பின்னர், கெவின் ரட் புதிய பிரதமராக ஆளுனரால் அறிவிக்கப்படுவார்.


மூலம்[தொகு]