உள்ளடக்கத்துக்குச் செல்

ஆத்திரேலியா வரும் படகு அகதிகளை நவூருவும் ஏற்கும், கெவின் ரட் புதிய உடன்பாடு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, ஆகத்து 3, 2013

ஆத்திரேலியாவில் தேர்தல்கள் நெருங்கும் வேளையில், படகுகளில் அகதிகளாக வருவோரை வேறு நாடுகளுக்கு அனுப்பும் திட்டத்தை அந்நாடு மேலும் விரிவுபடுத்தியுள்ளது.


நவூரு தீவு

மைக்குரோனேசியாவில் உள்ள சிறிய பசிபிக் தீவான நவூருவின் அரசுத்தலைவர் பாரன் வாக்காவிற்கும், ஆத்திரேலியப் பிரதமர் கெவின் ரட்டுக்கும் இடையில் புதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன்படி சட்டவிரோதமாக ஆத்திரேலியக் கடற்பரப்பினுள் நுழையும் அகதிகள் நவூருவுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். அவர்கள் உண்மையான அகதிகள் என நிரூபிக்கப்படும் பட்சத்தில், அவர்கள் நவூருவிலேயே நிரந்தரமாகத் தங்கவைக்கப்படுவர். ஏனையோர் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவர்.


இதே போன்றதொரு ஒப்பந்தத்தை இரு வாரங்களுக்கு முன்னர் பப்புவா நியூ கினியுடன் ஆத்திரேலியா செய்து கொண்டிருந்தது. இதனை அடுத்து 40 ஆண்கள் முதற் தொகுதி அகதிகள் மானுசுத் தீவுக்கு இவ்வாரம் அனுப்பப்பட்டனர்.


நவூருவுடனான உடன்பாட்டில் குடும்பங்களும், பெரியவர்களுடன் வராத சிறுவர்களும் நவூருவில் குடியமர்த்தப்படுவர். இதற்காக ஆத்திரேலியா பெருமளவு உதவிகளை நவூருவுக்கு அளிக்க முன்வந்துள்ளது.


"நவூரு ஒரு மிகச் சிறிய நாடு, இதனால் அங்கு குடியமர்த்தப்படுபவர்களின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருக்கும்," என கெவின் ரட் தெரிவித்தார். நவூருவின் மக்கள் தொகை 9,400 மட்டுமே.


பப்புவா நியூ கினி திட்டத்தை ஏற்கனவே மனித உரிமை ஆர்வலர்களும், அகதிகளுக்காக குரல் கொடுப்பவர்களும் எதிர்த்துள்ளனர். புதிய திட்டத்தினால் தாம் குழம்பிப் போயுள்ளதாக ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ளது.


நவூருவிற்கு ஏற்கனவே அகதிகள் அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் நிரந்தரமாக அங்கு தங்க அனுமதிக்கப்படவில்லை. இவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்க மட்டுமே அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் அங்குள்ள அகதி முகாம் ஒன்றில் வெடித்த வன்முறையை அடுத்து முகாம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டது. 100 அகதிகள் வரை சிறையில் அடைக்கப்பட்டனர்.


மூலம்

[தொகு]