உள்ளடக்கத்துக்குச் செல்

நவூரு தடுப்பு முகாம் 'கொடியதும் இழிவானதும்' என பன்னாட்டு மன்னிப்பகம் அறிக்கை

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, நவம்பர் 23, 2012

பசிபிக் தீவான நவூருவில் அமைக்கப்பட்டுள்ள ஆத்திரேலிய அகதிகள் முகாம்கள் மிகவும் 'கொடியதும் இழுவு தரக்கூடியதும்' ஆகும் என பன்னாட்டு மன்னிப்பகம் கண்டுள்ளது.


மன்னிப்பகத்தின் பிரதிநிதிகள் மூன்று நாட்கள் நவூருவில் தங்கியிருந்து அங்குள்ள முகாம்களின் நிலைமைகளை நேரில் அவதானித்து தமது அறிக்கையை வெளியிட்டுள்ளது. இம்முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் தற்போது 386 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


கூடாரங்கள் மிகவும் சூடாகவும், ஈரமாகவும் இருப்பதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நீண்ட காலம் தடுத்து வைக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக அகதிகள் பலர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.


ஆத்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாகப் படகுகளில் வருவோர் எண்ணிக்கை அண்மைக்காலங்களில் அதிகரித்ததை ஒட்டி, அவர்களை வேறு நாடுகளில் தடுத்து வைத்து அவர்களின் விண்ணப்பங்களைப் பரிசீலிக்க ஆத்திரேலிய அரசு கடந்த செப்டம்பர் மாதத்தில் முடிவெடுத்ததை அடுத்து நவுறு முகாம் அமைக்கப்பட்டது. மேலும் ஒரு முகாம் பப்புவா நியூ கினியின் மானுஸ் தீவில் அமைக்கப்பட்டுள்ளது.


16 ஆண்கள் அல்லது 5 ஆண்கள் தங்கக்கூடிய மற்றும் 150மீ x 100மீ கூடாரங்களில் மிக நெருக்கமாகத் தூக்குப் படுக்கைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், உடுப்புகள் வைப்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு பிளாஸ்டிக்குப் பெட்டி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மன்னிப்பகம் கண்டுள்ளது. 40 பாகை வெப்பநிலையில் மிகக்கடுமையான சூடு அங்கு காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


"ஏதோ பயங்கரக் குற்றவாளிகளைப் போல எம்மை நடத்துகிறார்கள். ஆத்திரேலியாவில் பயங்கரக் குற்றவாளிகள் சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிறார்கள்," என முகாமில் தங்கியுள்ள அகதி ஒருவர் கூறினார். ஒன்பது ஆண்கள் காலவரையறையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.


தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் உரிமைகளை ஆத்திரேலிய, நவூரு அரசுகளினால் கடுமையாக மீறி வருகின்றனர். இம்முகாம்கள் உடனடியாக மூடப்பட வேண்டும் என மன்னிப்பகத்தின் அறிக்கை கூறுகிறது. நவூரு தீவில் அமைக்கப்பட்டிருக்கும் ஆத்திரேலிய அகதிகள் முகாமின் நிலைமைகள் சகிக்க முடியாமல் இருப்பதாக மனித உரிமைகளுக்கான ஐநா ஆணையாளர் திருமதி நவி பிள்ளை அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார்.


இதற்குப் பதிலளித்துள்ள ஆத்திரேலிய அரசுப் பேச்சாளர் ஒருவர், உணவு, மற்றும் நீர் தாராளமாக வழங்கப்படுகின்றன என்றும் தேவையான நேரத்தில், மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்று கூறினார். பொழுதுபோக்கு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளனர் என்றார். இவர்களின் விண்ணப்பங்கள் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் பரிசீலிக்கப்படும் என்றார்.


நவூருவில் தங்கியிருப்போரில் பெரும்பான்மையானோர் இலங்கை, மற்றும் ஆப்கானித்தான் அகதிகள் ஆவர்.


மூலம்

[தொகு]