உள்ளடக்கத்துக்குச் செல்

நவூரு தீவில் ஆத்திரேலியா நடத்தும் அகதி முகாமில் வன்முறை வெடித்தது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, சூலை 20, 2013

பசிபிக் தீவுகளில் ஒன்றான நவூருவில் ஆத்திரேலிய அரசினால் பராமரிக்கப்பட்டு வரும் தடுப்பு முகாம்களில் வன்முறை இடம்பெற்றதை அடுத்து அங்கு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர். நேற்று வெள்ளிக்கிழமை கட்டடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. முகாமின் மருத்துவ கூடம் ஒன்றும் சேதமடைந்தது. இவ்வன்முறைகளில் சுமார் 150 அகதிகள் ஈடுபட்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


சட்டவிரோதமாக ஆத்திரேலியக் கடற்பரப்பினுள் நுழைவோருக்கு எதிராகக் கடும் சட்டங்களை நேற்று ஆத்திரேலியப் பிரதமர் கெவின் ரட் அறிவித்த சில மணி நேரத்தில் இவ்வன்முறை வெடித்தது.


வன்முறையை அடக்க காவல்துறையினருக்கு உதவியாக உள்ளூர் வாசிகளும் இரும்புக் குழாய்களுடனும், கத்திகளுடனும் வந்து இணைந்து கொண்டனர். வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலானோர் ஈரானியர்கள் எனக் கூறப்படுகிறது.


வெள்ளிக்கிழமை மாலை இந்த வன்முறை வெடித்ததாகவும், இரண்டு மணித்தியாலங்களுல் அவர்கள் முழு முகாமையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் எனவும் முகாமின் காவலாளி ஒருவர் செய்தியாளருக்குத் தெரிவித்தார். முகாம் வாசிகள் பலரிடம் சமையலறைகளில் இருந்து எடுக்கப்பட்ட கத்திகள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. முகாமில் இருந்த நால்வர் காயமடைந்தனர். காவலாளிகள் பலரும் காயமடைந்துள்ளனர்.


நான்கு மணி நேரத்தின் பின்னர் உள்ளூர் வாசிகளின் உதவியுடன் காவல்துறையினர் முகாமைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தற்போது நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளதாக ஆத்திரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர். முகாமில் இருந்த சிலர் தப்பி ஓடியதாகவும், ஆனாலும் தற்போது அவர்கள் அனைவரும் முகாம் திரும்பியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.


கடந்த சில மாதங்களில் பெருமளவு அகதிகள் ஆத்திரேலியாவுக்குள் படகுகள் மூலம் நுழைந்துள்ளனர். நேற்று முதல் படகுகள் மூலம் வருபவர்கள் எவரும் எப்போதும் ஆத்திரேலியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கெவின் ரட் நேற்ரு அறிவித்தார். பதிலாக, அவர்கள் அனைவரும் பப்புவா நியூ கினிக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்தௌ அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் தொடர்ந்து பப்புவா நியூ கினியில் தங்க அனுமதிக்கப்படுவார்கள். ஏனையோர் தமது சொந்த நாட்டுக்கோ அல்லது வேறொரு நாட்டுக்கோ அனுப்பி வைக்கப்படுவார்கள்.


மூலம்

[தொகு]