உள்ளடக்கத்துக்குச் செல்

ஆத்திரேலியா - பப்புவா நியூ கினி புதிய உடன்பாட்டின் படி 40 அகதிகள் மானுஸ் தீவை சென்றடைந்தனர்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், ஆகத்து 1, 2013

படகுகளில் சட்டவிரோதமாக ஆத்திரேலியக் கடற்பரப்புக்குள் நுழையும் அகதிகள் தொடர்பாக அந்நாட்டு அரசு அண்மையில் அறிவித்த புதிய கொள்கையை அடுத்து, முதல் தொகுதி அகதிகள் இன்று பப்புவா நியூ கினியின் மானுஸ் தீவுக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டனர்.


மானுஸ் தீவு
மானுஸ் தீவில் அகதிகள் முகாம்

ஆப்கானித்தான், ஈரான், மற்றும் பாக்கித்தானிய ஆண்கள் 40 பேர் இன்று கிறிஸ்துமஸ் தீவில் இருந்து மானுஸ் தீவுக்கு சென்றடைந்தனர்.


ஆத்திரேலியக் குடிவரவுத்துறை அமைச்சர் டோனி பேர்க் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், புதிய திட்டம் சட்டவிரோத ஆட்கடத்தல்காரருக்கு கடுமையான ஓர் எச்சரிக்கையாக இருக்கும் எனக் கூறினார். கூடிய விரைவில் அங்கு பெண்கள், மற்றும் குழந்தைகளும் அனுப்பப்படுவார்கள் என அவர் கூறினார்.


இரு நாட்டுப் பிரதமர்கள் கெவின் ரட், பீட்டர் ஓ’நீல் ஆகியோருக்கிடையில் கடந்த சூலை 19 இல் இடம்பெற்ற ஒப்பந்தம் ஒன்றின் படி படகுகளில் அகதிகளாக வருவோர் அனைவரும் பப்புவா நியூ கினிக்கு அனுப்பப்பட்டு அங்கு அவர்களது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும், விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுபவர்கள் பப்புவா நியூ கினியிலேயே நிரந்தரமாகத் தங்க அனுமதிக்கப்படுவர். விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாதவர்கள் சொந்த நாட்டுக்கோ அல்லது வேறெந்த நாட்டுக்கோ அனுப்பப்படுவர். ஆனாலும், ஆத்திரேலியாவுக்குள் நுழைய அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.


பப்புவா நியூ கினியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த உடன்பாட்டின் படி, ஆத்திரேலியா அந்நாட்டுக்கு 500 மில்லியன் டாலர்கள் உதவி வழங்கும்.


பப்புவா நியு கினியின் சட்ட முறைமை அகதிகளின் விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதற்கு போதுமானதாக இல்லை என அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையம் தெரிவித்துள்ளது.


மூலம்

[தொகு]