ஆத்திரேலிய இரட்டைக் கொலை வழக்கில் சிங்கப்பூரர் ராம் திவாரி விடுதலை

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சூலை 29, 2012

ஆத்திரேலியாவின் சிட்னி நகரில் இரண்டு சக மாணவர்கள் கொல்லப்பட்ட வழக்கில் இரண்டு முறை குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட சிங்கப்பூரைச் சேர்ந்த மாணவர் ராம் புனித் திவாரி நியூ சவுத் வேல்சு குற்றவியல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் போதிய ஆதாரம் இன்மையால் விடுவிக்கப்பட்டார்.


2003 ஆம் ஆண்டு செப்டம்பரில் டே சோவ் லியாங் (26), டோனி டான் போ சுவான் (26) ஆகிய இரு மாணவர்கள் கொல்லப்பட்டனர். திவாரி தங்கியிருந்த வீட்டிலேயே இந்த இரு மாணவர்களின் இறந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. நியூ சவுத் வேல்சு பல்கலைக்கழகத்தில் பயிலும் மூவரும் ஒரே வீட்டிலேயே குடியிருந்தனர். அடிப்பந்தாட்ட மட்டையால் இந்த இரு மாணவர்களும் அடித்துக் கொல்லப்பட்டிருந்தனர்.


எட்டு மாதங்களின் பின்னர் திவாரி மீது காவல்துறையினர் கொலைக்குற்றம் சாட்டினர். திவாரிக்கு அப்போது வயது 23. சிங்கப்பூர் இராணுவத்தில் பணியாற்றும் திவாரி புலமைப்பரிசில் பெற்று சிட்னியில் கல்வியைத் தொடர்ந்து வந்தவர். விசாரணை முடிவில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஆனாலும் மேன்முறையீட்டை அடுத்து 2009 ஆம் ஆண்டில் இத்தண்டனை 48 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.


மேன்முறையீட்டை அடுத்து நியூ சவுத் வேல்சு குற்றவியல் மேன்நீதிமன்றத்தில் இவ்வழக்கு சென்ற வியாழன் அன்று விசாரணைக்கு வந்தது. அந்தக் கொலைச் சம்பவத்தோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ள ஒரு வாகனத்தைப் பற்றியும் அந்த வாகனத்தில் இருந்த மூவர் பற்றியும், அவர்களுக்கும் இரட்டைக் கொலைகளுக்கும் தொடர்பு உண்டா என்பது பற்றியும் நீதிமன்ற வழக்கில் கடைசி வரை உறுதிப்படுத்தப்படவில்லை என்று தற்காப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி திவாரியை நிபந்தனைகள் எதுவும் இன்றி விடுவித்தார்.


ராம் திவாரி விடுதலை செய்யப்பட்டதை அறிந்த கொல்லப்பட்ட மாணவர்களின் உறவினர்கள் தமது அதிர்ச்சியை வெளியிட்டுள்ளனர்.


மூலம்[தொகு]