உகாண்டா குண்டுவெடிப்பில் கால்பந்து ரசிகர்கள் 64 பேர் கொல்லப்பட்டனர்
திங்கள், சூலை 12, 2010
- 3 சூன் 2023: உகாண்டா குண்டுவெடிப்பில் கால்பந்து ரசிகர்கள் 64 பேர் கொல்லப்பட்டனர்
- 9 ஏப்பிரல் 2015: உகாண்டாவில் பழங்குடியினருடன் இடம்பெற்ற கலவரங்களில் பலர் இறப்பு
- 14 சூன் 2014: ஆப்பிரிக்கக் காடுகளில் 2013ஆம் ஆண்டில் 20,000 யானைகள் கொல்லப்பட்டுள்ளன
- 13 ஆகத்து 2012: 2012 ஒலிம்பிக்சு மாரத்தான்: உகாண்டாவின் ஸ்டீவன் கிப்ரோட்டிச் தங்கப்பதக்கம் பெற்றார்
- 30 சூலை 2012: எபோலா நச்சுயிரி உகாண்டாவின் தலைநகருக்கும் பரவியுள்ளதாக எச்சரிக்கை
உகாண்டா தலைநகர் கம்பாலாவில் நேற்று இடம்பெற்ற இரண்டு குண்டுத்தாக்குதல்களில் குறைந்தது 64 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
2010 கால்பந்து உலகக்கோப்பை இறுதிப் போட்டியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தவர்களே குண்டுத் தாக்குதலுக்கு இலக்கானார்கள். மேலும் 70 பேர் காயமடைந்தனர். இத்தாக்குதல்கள் உதைப்பந்தாட்டக் கழகம் ஒன்றிலும், எத்தியோப்பிய உணவகம் ஒன்றிலும் நேற்றிரவு இடம்பெற்றது. ஸ்பெயினுக்கும் நெதர்லாந்துக்கும் இடையே இடம்பெற்ற இறுதிப் போட்டி முடிவடைய 10 நிமிடங்கள் இருக்கையிலேயே இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
இத்தாக்குதல்கள் இரண்டும் தற்கொலைத் தாக்குதல்களாக இருக்கலாம் எனவும் சோமாலியாவின் அல்-சபாப் போரளிகள் இவற்றை நடத்தியிருக்கக்கூடும் எனவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
உகாண்டாவின் அமைதிப் படையினர் சோமாலியாவில் நிலைகொண்டுள்ளனர். கம்பாலாவில் தாக்குதல் நடத்தப்படும் என அல்-கைதா சார்பு அல்-சபாப் குழுவினர் முன்னர் பல தடவை எச்சரித்திருந்தனர். சோமாலியாவின் இடைக்கால அரசின் பாதுகாப்புக்காக ஆப்பிரிக்க ஒன்றிய நாடுகளின் 5,000 பேர் மொகதிசுவில் உள்ளனர்.
இத்தாக்குதலில் இறந்தோரில் பெரும்பாலானோர் வெளிநாட்டவர்கள் ஆவர். இறந்தவர்களில் ஒருவர் இலங்கையைச் சேர்ந்தவர் என இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்திருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த நிவாரணப் பணியாளர் ஒருவரும் கொல்லப்பட்டார். மேலும் மூன்று அமெரிக்கர்கள் காயமடைந்தனர்.
உகாண்டாவின் அரசுத்தலைவர் யொவேரி முசெவேனி இத்தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ளார். எனினும் மொகதிசுவில் தமது பணிகளைத் தாம் நிறைவேற்றியே தீருவோம் என சூளுரைத்தார்.
மூலம்
[தொகு]- 'Somalia link' as World Cup fans die in Uganda blasts, பிபிசி, ஜூலை 12, 2010
- Uganda bomb blasts kill scores, கார்டியன், ஜூலை 12, 2010
- Lankan killed in Uganda, டெய்லிமிரர், ஜூலை 13, 2010