ஆத்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் அபோட் தலைமையில் லிபரல் கட்சி பெரும் வெற்றி

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, செப்தெம்பர் 8, 2013

ஆத்திரேலியாவில் நேற்று சனிக்கிழமை இடம் பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கடந்த ஆறு ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த தொழிற் கட்சியை டோனி அபோட் தலைமையிலான லிபரல் கட்சி-தேசியக் கூட்டணி இலகுவாக வென்று ஆட்சியைப் பிடித்தது. கூட்டணி 88 இடங்களையும், தொழிற்கட்சி 57 இடங்களையும் கைப்பற்றின.


டோனி அபோட்

பிரதமர் பதவியை இழந்த கெவின் ரட் தொழிற் கட்சியின் தலைமைத்துவத்திற்கு தான் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார். கடந்த சூன் மாதத்தில் தொழிற் கட்சியின் தலைமைப் பதவிக்கு நடந்த போட்டியில் கெவின் ரட் பிரதமர் ஜூலியா கிலார்டை வென்று பிரதமரானார்.


இம்முறை தேர்தலில், பொருளாதார மந்தநிலை, தொழிற்கட்சி அரசு அறிமுகப்படுத்திய கரிம-வரி, சட்டவிரோதமாக படகுகளில் வரும் அகதிகள் பிரச்சினை ஆகியன முக்கிய இடத்தைப் பிடித்தன.


"கரிம வரியை அகற்றுதல், படகு அகதிகளை நிறுத்துதல் ஆகிய பிரச்சினைகளுக்கு தாம் முன்னுரிமை கொடுக்கப்போவதாக அபோட் அறிவித்துள்ளார்.


"அகதிகளை கிறிஸ்துமஸ் தீவுகளுக்கு கொண்டு செல்லாமல், அவர்களைக் கடற்படையினர் தாம் கண்டுபிடித்த இடத்தில் இருந்தே திருப்ப அனுப்ப விருக்கிறோம்" என அபோட் கூறினார். வெளிநாடுகளுக்கு வழங்கும் நிதி உதவிகளையும் 4.5 பில்லியன் டாலர்களால் குறைக்கவிருப்பதாக அவர் கூறினார்.


பொருளாதாரம், மற்றும் சட்டவியலில் ஒக்சுபோர்ட் பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற அபோட் அரசியலில் நுழைய முன்னர் ரோமன் கத்தோலிக்க மதகுருவாகப் பணியாற்றினார். 1994 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.


சனிக்கிழமை இடம்பெற்ற தேர்தலில் 14 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். ஆத்திரேலியாவில் வாக்களிப்பு கட்டாயம் ஆகும்.


மூலம்[தொகு]