உள்ளடக்கத்துக்குச் செல்

ஆப்பிரிக்காவில் பெருந்தொகையான பண்ணை நிலங்களை வங்காளதேசம் குத்தகைக்கு வாங்குகிறது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், மே 18, 2011

எதிர்காலத்தில் உணவுப் பற்றாக்குறை வராமல் தடுக்கும் முகமாக ஆப்பிரிக்க நாடுகளில் பல்லாயிரக்கணக்கான பண்ணை நிலங்களைக் குத்தகைக்கு வாங்கியிருப்பதாக வங்காளதேச வணிக நிறுவனங்கள் அறிவித்துள்ளன.


ஏற்கனவே இரண்டு வங்காளதேசக் கம்பனிகள் உகாண்டா, காம்பியா, மற்றும் தான்சானியா ஆகிய நாடுகளில் பாவிக்கப்படாமல் இருக்கும் பண்படுத்ததகுந்த நிலங்களை குத்தலைக்கு எடுப்பதற்கு அந்நாட்டு அரசாங்கங்களுடன் உடன்பாட்டுக்கு வந்துள்ளன. இவ்வார இறுதியில் தான்சானியாவில் மேலும் 30,000 எக்டயர் நிலத்தை 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.


ஆப்பிரிக்க நாடுகளில் பெருமளவு உழத்தகுந்த நிலங்கள் பாவிக்கப்படாமல் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதே வேளையில், ஆண்டு முழுவதும் முக்கிய பயிர் வகைகளை உற்பத்தி செய்வதற்குத் தேவையான மனித வளமும், நுண்திறமையும் வங்காளதேசம் கொண்டுள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.


இக்குத்தகைத் திட்டத்தின் படி, இந்நிலங்களில் விளையும் பயிர்வகைகளின் குறைந்தது 60 விழுக்காடு வரை வங்காளதேச நிறுவனங்கள் தமக்கு எடுத்துக் கொள்ளும். பதிலாக, வங்காளதேசம் ஆப்பிரிக்க விவசாயிகளை நெல் உற்பத்தி, விதைப் பாதுகாப்பு, மற்றும் நீர்ப்பாசனம் போறவற்றில் பயிற்சி அளிக்கும்.


இப்புதிய திட்டத்தின் படி உணவு உற்பத்தி அதிகரிக்கும் என்றும், வங்காளதேசத்தின் விரிவடையும் வேலையாட்கள ஆப்பிரிக்க விளை நிலங்களில் பணியாற்ற முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் கோதுமை, மற்றும் பருத்தி போன்றவற்றையும் விளைவிக்க முடியும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.


"எமது வேளாண்மையை விருத்தி செய்வதற்கு நாம் முயலுகிறோம், ஆனாலும் எமது நாட்டில் அதற்குத் தேவையாவ விளைநிலங்கள் மிகக் குறைவாகவே உள்ளது. இதனாலேயே நாம் ஆப்பிரிக்கா நோக்கி நகர முயற்சி செய்கிறோம்," என வங்காளதேச வெளியுறவுத்துறை அதிகாரி வகிதுர் ரகுமான் தெரிவித்தார்.


வங்காளதேசம் உலகின் நான்காவது பெரிய அரிசி விளையும் நாடாகும். கடந்த ஆண்டு மட்டும் அது 34 மில்லியன் தொன் அரிசியை உற்பத்தி செய்துள்ளது. வங்காளதேசத்தில் அடிக்கடி இடம்பெறும் இயற்கை அனர்த்தங்களினால் அங்கு உணவுப் பற்றாக்குறை நிலவுகிறது.


மூலம்[தொகு]