உள்ளடக்கத்துக்குச் செல்

ஆப்பிரிக்க ஒன்றியத்தின் அமைதி முன்மொழிவை லிபியத் தலைவர் ஏற்றுக் கொண்டார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஏப்பிரல் 11, 2011

லிபியாவில் கடந்த 8 வார காலமாக இடம்பெற்றுவந்த நெருக்கடி நிலையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஆப்பிரிக்க ஒன்றியத் தலைவர்கள் அடங்கிய குழு சமர்ப்பித்த அமைதி முன்மொழிவை பெங்காசியில் உள்ல எதிரணித் தலைவர்களுக்கு சமர்ப்பித்துள்ளனர்.


லிபிய அரசு தமது இந்த முன்மொழிவை ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆப்பிரிக்க ஒன்றியத்தின் உயர்மட்டக் குழு ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை லிபியத் தலைவர் முஅம்மர் கடாபியைச் சந்தித்துப் பேசியிருந்தனர்.


தான் இந்த முன்மொழிவை ஆராய்ந்து வருவதாகவும், ஆனால் கடாபி பதவியில் இருந்து விலக வேண்டும் என்னும் தங்களது கோரிக்கையைத் தாம் விட்டுக் கொடுக்கப்போவதில்லை என அவர்கள் தெரிவித்தனர்.


கடாபிக்கு ஆதரவான படைகள் அண்மையில் எதிரணியின் மீது சில வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர், ஆனாலும் நேட்டோவின் வான்படைகள் அவர்களது முன்னேற்றத்தைத் தடுத்துள்ளனர். நேற்று ஞாயிறு மட்டும் கடாபியின் 25 தாங்கிகளை அஜ்தாபியாவில் அழித்துள்ளதாக நேட்டோ தெரிவித்திருக்கிறது.


ஆப்பிரிக்க ஒன்றியத்தின் அமைதி முன்மொழிவு வருமாறு:

  • உடனடி போர்நிறுத்தம்
  • மனிதாபிமான நிவாரண உதவிகள் தடையின்றி வழங்குதல்
  • வெளிநாட்டினரைப் பாதுகாத்தல்
  • அரசியல் தீர்வுக்கு அரசு மற்றும் எதிரணிப் பேச்சுவார்த்தை
  • நேட்டோ வான் தாக்குதல் நிறுத்தப்படல்


ஆப்பிரிக்க ஒன்றியத்தின் சார்பாக தென்னாப்பிரிக்கத் தலைவர் ஜேக்கப் சூமா, மவுரித்தானியாவின் தலைவர் மொகமது அப்தெல் அசீஸ், மாலித் தலைவர் அமடூ டோர், கொங்கோ குடியரசுத் தலைவர் டெனிஸ் நியுவெசோ, உகாண்டாவின் வெளியுறவுதுறை அமைச்சர் ஹென்றி ஓக்கெல்லோ ஆகியோர் நேற்று கேர்னல் கடாபியைச் சந்தித்திருந்தனர். இக்குழுவை ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்திருந்தது.


மூலம்

[தொகு]