ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்ட சிறுநீரகம் வெற்றிகரமாக எலிக்குப் பொருத்தப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஏப்பிரல் 15, 2013

ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்ட சிறுநீரகம் ஒன்றை அமெரிக்க அறிவியலாளர்கள் எலி ஒன்றுக்கு வெற்றிகரமாகப் பொருத்தியுள்ளார்கள். இச்சிறுநீரகம் எலியின் உடலில் இருந்து சிறுநீரை உற்பத்தி செய்வதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.


மனித சிறுநீரகம்

இவ்வாறு உருவாக்கப்பட்ட சிறுநீரகம் எலியின் உடலில் இருந்து சிறுநீரை உற்பத்தி செய்வதாகவும், ஆனால் இயற்கையான சிறுநீரகத்தை விட இவை செயற்திறன் குறைந்தவையாக உள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்த ஆய்வுக் கட்டுரை ஒன்று நேச்சர் மெடிசின் என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனாலும், இவ்வாய்வு எதிர்காலத்தில் பெரும் வெற்றியடையும் என அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.


உடம்பில் உள்ள குருதியில் சேரும் கழிவுகள், மற்றும் மேலதிக நீரை சிறுநீரகங்கள் வடிகட்டி வெளியேற்றுகின்றன.


அமெரிக்காவின் பொஸ்டனில் உள்ள மசாசூச்செட்சு பொது மருத்துவமனை ஆய்வுகூடத்தில் இவ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இறந்த எலி ஒன்றின் சிறுநீரகத்தை அகற்றி அதில் இருந்த பழைய கலங்களைக் கழுவி வெளியேற்றினர். பின்னர் புதிதாகப் பிறந்த எலிகளின் சிறுநீரகம், மற்றும் குருதிக் கலன்களை பழைய சிறுநீரகத்தினுள் சேர்த்து 12 நாட்களுக்கு உறுப்புகள் வளர்ச்சியடைய விட்டனர். பின்னர் இச்சிறுநீரகத்தை வாழும் எலிக்குப் பொருத்தினர். இச்சிறுநீரகம் வெற்றிகரமாக எலியின் குருதியை வடிகட்டி சிறுநீரை வெளியேற்றியது. ஆனாலும் இதன் செயற்திறன் 5% ஆகவே இருந்தது.


இன்று சிறுநீரகங்களே மாற்றுறுப்புக்காக அதிகம் தேவைப்படும் உள்ளுறுப்பாகும்.


மூலம்[தொகு]