ஆறு முன்னாள் பொசுனிய குரோவாசியத் தலைவர்கள் போர்க்குற்றவாளிகள் எனத் தீர்ப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், மே 29, 2013

1990களில் பால்க்கன் போரின் போது முன்னாள் யுகோசுலாவியாவில் போர்க்குற்றம், மற்றும் மனித இனத்துக்கு எதிரான குற்றம் புரிந்ததாகக் குற்றம் சட்டப்பட்ட ஆறு முன்னாள் பொசுனிய குரொவாசியத் தலைவர்களும் குற்றவாளிகள் என ஐக்கிய நாடுகளின் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


பொசுனியாவில் தனியான குரொவாசிய நாடு ஒன்றை அமைக்கும் பொருட்டு பொசுனிய முஸ்லிம்களையும், குரொவாசியரல்லாதோரையும் படுகொலை புரிந்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.


நெதர்லாந்தின் த ஏக் நகரில் அமைந்துள்ள ஐநா நீதிமன்றம் யத்ரான்கோ பிரிலிக் என்பவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. ஏனையோர் ஐவருக்கும் 10 முதல் 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

  • யத்ரான்கோ பிரிலிக் - சுயாதீனமாக அறிவிக்கப்பட்ட குரொவாசிய நாட்டின் தலைவர் - 25 ஆண்டுகள்
  • புரூனோ ஸ்டோஜிச் - பிரிந்து போன எர்செக்-பொசுனா நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் - 20 ஆண்டுகள்
  • சுலொபதான் பிரல்ஜாக் - முன்னாள் போராளிகள் குழுத் தலைவர் - 20 ஆண்டுகள்
  • மிலிவோஜ் பெத்கோவிச் - முன்னாள் போராளித் தலைவர் - 20 ஆண்டுகள்
  • வலண்டின் கோரிச் - பொசுனிய குரொவாசிய முன்னாள் காவல்துறைத் தலைவர் - 16 ஆண்டுகள்
  • பெரிசிலாவு பூசிச் - முன்னாள் சிறைச்சாலை தலைவர் - 10 ஆண்டுகள்


இவ்வாண்டு சூலை 1 இல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையவுள்ள குரொவாசியா இப் போர்க்குற்றச்செயல்களைப் புரிந்ததாகவும், தூய்மையான குரொவாசியா நாட்டை உருவாக்குவதற்கு இனவழிப்பு முக்கியமானதாக இருந்ததாக முன்னாள் பொசுனியத் தலைவர் பிரான்சோ துஜ்மன் நம்பியதாக நீதிபதிகள் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.


குற்றவாளிகள் அனைவரும் மேன்முறையீடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


மூலம்[தொகு]