உள்ளடக்கத்துக்குச் செல்

பொசுனியாவில் நடுவண் அரசு அமைக்க மூன்று இனத்தவர்களும் ஒப்புதல்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், திசம்பர் 29, 2011

பொசுனியா எர்செகோவினாவில் முசுலிம்கள், குரொவாசியர்கள், மற்றும் சேர்பிய இனத்தவர்கள் மூவரும் நடுவண் அரசு ஒன்றை அமைப்பதற்கு உடன்பட்டுள்ளனர். இதன் மூலம் கடந்த 14 மாதங்களாக அங்கு நிலவி வந்த அரசியல் மந்தநிலை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்த ஆண்டு 2010 அக்டோபர் மாதத்தில் நடந்த தேர்தல்களுக்குப் பின்னர் பொசுனியாவில் அரசாங்கம் ஒன்று அமைக்கப்படாமல் இருந்து வந்தது. புதிய உடன்படிக்கை மூலம் ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் நேட்டோ அமைப்புகளில் பொசுனியா உறுப்புரிமை கோரவும் வழி ஏற்பட்டுள்ளது.


புதிய உடன்படிக்கையின் படி, பொசுனிய-குரொவாசியர் ஒருவர் பிரதமராகவும், பொசுனிய-முசுலிம் ஒருவர் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் தேர்ந்தெடுக்கப்படுவர். புதிய அரசு அடுத்த மாத ஆரம்பத்தில் பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


1990களின் நடுப்பகுதியில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் பொசுனியாவில் மட்டும் 100,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். போரின் முடிவில், சேர்பியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிறுப்ஸ்கா குடியரசு, மற்றும் பொசுனியர் குரொவாசியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பொசுனியா எர்செகோவினா ஆகிய சுயாட்சிக் குடியரசுகள் நிறுவப்பட்டன.


மூலம்

[தொகு]