1995 சிரெப்ரெனிக்கா படுகொலைக்கு சேர்பிய நாடாளுமன்றம் மன்னிப்புக் கோரியது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், மார்ச்சு 31, 2010

1995ம் ஆண்டு சூலை மாதத்தில் சிரெப்ரெனிக்காவில் எட்டாயிரத்திற்கும் அதிகமான பொசுனிய முஸ்லிம்கள் பொஸ்னியாவின் சேர்பியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுக்கு மன்னிப்புக் கோரும் தீர்மானம் ஒன்றை செர்பிய நாடாளுமன்றம் இன்று நிறைவேற்றியது.


சிரெப்ரெனிக்கப் படுகொலை நினைவுக் கற்கள்

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் இடம்பெற்ற மிகப்பெரும் இனவழிப்பு இதுவாகும்.


மிக சிறிய பெரும்பான்மை வாக்குகளால் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செர்பியா அதன் அண்டை நாடுகளுடன் ஏற்படுத்தக்கூடிய மீள் இணக்கப்பாட்டு முயற்சிகளில் முக்கியமான ஒரு நடவடிக்கையாக இந்தத் தீர்மானம பார்க்கப்படுகிறது.


இனவழிப்பு இடம்பெற்றதை சேர்பிய நாடாளுமன்றம் ஒப்புக்கொள்ளத் தவறி விட்டதை சேர்பியாவில் உள்ள பொசுனிய முஸ்லிம்கள் கண்டித்துள்ளனர். ஆனால் பொசுனியப் போரின் போது இடம்பெற்ற கொடூரங்களில் ஐக்கிய நாடுகளால் ஜெனோசைட் (இனவழிப்பு) என்று வகைப்படுத்தப்பட்டுள்ள ஒரே ஒரு சம்பவமும் இதுவே.


சிரெப்ரெனிக்கா படுகொலைகள் நிகழ்ந்து ஒரு தசாப்தத்துக்கும் அதிகமான காலம் கடந்துள்ள போதிலும் செர்பியாவைப் பொறுத்தவரை பொசுனியப் போர் இன்றும் பெரும் சர்ச்சைக்குரிய விடயங்களில் ஒன்றாக காணப்படுகின்றது.


இந்த போர்க்காலத்தின் போது, பல மோசமான கொடூரங்கள் செர்பியாவின் பெயரிலேயே புரியப்பட்டுள்ளதை அவர்களின் நாடு ஏற்றுக்கொண்டே ஆகவேண்டுமென்று அங்குள்ள பலரும் கருதுகின்றனர்.


ஆனால் மற்றவர்களோ செர்பியா மீது அநியாயமாக அப்பட்டமான அவதூறுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தொடர்ந்தும் நம்புகின்றனர்.


சேர்பியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு இந்தத் தீர்மானம் ஒரு முக்கிய படிக்கல்லாகக் கருதப்படுகிறது. மொத்தம் 250 உறுப்பினர்களில் 127 பேர் மட்டுமே இத்தீர்மானத்திற்கு அதரவாக வாகக்ளித்தனர்.

மூலம்[தொகு]