ஆஷசுக் கிண்ணத் தொடரை இங்கிலாந்து 3-1 கணக்கில் வென்றது

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சனவரி 7, 2011

புகழ்பெற்ற ஆஷஸ் கிண்ணத் தொடரை 24 ஆண்டுகளுக்குப் பின்னர் இங்கிலாந்து அணி ஆத்திரேலியாவில் விளையாடி தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றது. இன்றைய ஐந்தாவது கடைசி நாள் ஆட்டத்தில் ஒரு இன்னிங்ஸ், 83 ஓட்டங்களால் ஆண்ட்ரூ ஸ்டருவுஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி வென்றது. ஆத்திரேலிய அணி தனது வரலாற்றில் தொடர் போட்டி ஒன்றில் மூன்று ஆட்டங்களில் இன்னிங்சிற்கும் அதிகமாக தோற்றது இதுவே முதல் தடவையாகும்.


ஆஷஸ் கோப்பை

இன்றைய ஆட்டத்தின் போது பார்வையாளர்கள் இலவசமாக துடுப்பாட்ட அரங்கினுள் அனுமதிக்கப்பட்டனர். ஏறத்தாழ இங்கிலாந்து ஆதரவாளர்களே நிறைந்து காணப்பட்டனர்.


ஆத்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் வரலாற்றுச் சிறப்பு மிக்க துடுப்பாட்டத் தொடர் ஆஷசு தொடர் ஆகும். 2006-2007 காலப்பகுதியில் ஆத்திரேலியாவில் இடம்பெற்ற தொடரில் ஆத்திரேலிய அணி 5-0 என்ற கணக்கில் பெரு வெற்றி பெற்றிருந்தது. 24 ஆண்டுக்குப் பின் ஆத்திரேலிய மண்ணில், ஆஷசு தேர்வுத் தொடரை இங்கிலாந்து இப்போது கைப்பற்றியுள்ளது. இதற்கு முன் 1987ம் ஆண்டு மைக் கேட்டிங் தலைமையிலான இங்கிலாந்து அணி, ஆத்திரேலியாவில் ஆஷசுத் தொடரைக் கைப்பற்றி இருந்தது.


தேர்வுத் துடுப்பாட்டத்தில் இருந்து இங்கிலாந்து அணி வீரர் போல் கொலிங்வுட் இன்றைய ஆட்டத்துடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுவரை 67 தேர்வுப் போட்டிகளில் விளையாடி 10 சதம் உட்பட 4246 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இன்றைய ஆட்டத்தின் ஆட்டநாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் இங்கிலாந்து வீரர் அலிஸ்டர் குக் தெரிவனார். இவர் ஐந்து ஆடங்களிலும் மொத்தம் 766 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.


ஆத்திரேலிய அணியின் தலைவர் ரிக்கி பொண்டிங் கைமுறிவு காரணமாக ஐந்தாவது ஆட்டத்தில் விளையாடவில்லை. மைக்கல் கிளார்க் ஐந்தாவது ஆட்டத்துக்குத் தலைமை தாங்கினார். இன்றைய தோல்வியின் பின்னர் தான் இனிமேல் 20-20 ஆட்டங்களில் விளையாடப் போவதில்லை என மைக்கல் கிளார்க் அறிவித்தார்.


ஆத்திரேலிய துடுப்பாட்ட வரலாற்றில் முதல் முறையாக ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு வீரர் தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஆத்திரேலிய அணியில் விளையாடத் தேர்தெடுக்கப்பட்டர். ஆஷசுத் தொடரின் ஐந்தாவது ஆட்டத்தில் இவர் தனது முதலாவது பன்னாட்டு ஆட்டத்தில் விளையாடினார். உசுமான் கவாஜா இசுலாமாபாத்தில் பிறந்தவர். இவருக்கு 24 வயதாகிறது.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]