உள்ளடக்கத்துக்குச் செல்

ஆஸ்திரேலியத் தூதரை பிஜி வெளியேற்றியது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சூலை 14, 2010

ஆஸ்திரேலியா தமது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாகக் குற்றம் சாட்டி தெற்கு பசிபிக் நாடான பிஜி தமது நாட்டுக்கான ஆஸ்திரேலியத் தூதரை வெளியேற்றியுள்ளது.


பிஜிக்கான ஆஸ்திரேலியாவின் பதில் தூதுவர் சேரா ரொபேர்ட்ஸ் இன்று தலைநகர் சுவாவில் இருந்த தனது குடும்பத்தினருடன் வெளியேறினார்.


பிஜியில் மக்களாட்சிக்கான தேர்தல்களை உடனடியாக நடத்த அண்மையில் ஆஸ்திரேலியா கோரியதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு இராணுவப் புரட்சியை அடுத்து அந்நாடு இராணுவ ஆட்சியில் இருந்து வருகிறது.


மெலனீசிய நாடுகளின் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டை பிஜி அடுத்த வாரம் நடத்த இருந்தது. இக்கூட்டமைப்பில் பிஜி, பப்புவா நியூ கினி, வனுவாட்டு, சொலமன் தீவுகள் ஆகியன உறுப்பினர்களாக உள்ளனர். இம்மாநாட்டை நடத்துவதற்கு எதிராக ஆஸ்திரேலியா கடுமையாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதை அடுத்து இம்மாநாடு இடைநிறுத்தப்பட்டது. இதன் காரணமாகவே ஆஸ்திரேலியத் தூதரை பிஜி வெளியேற்றியுள்ளதாக அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


பிஜியின் இராணுவத் தலைவர் பிராங்க் பைனிமராமா நியூசிலாந்து வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இது குறித்து ஆஸ்திரேலியாவை நேரடியாகக் குறை கூறினார்.


2014 ஆம் ஆண்டில் நடத்துவதாக அறிவிக்கப்பட்ட மக்களாட்சிக்கான பொதுத்தேர்தல்களை இரத்துச் செய்ய தாம் கடுமையாக யோசித்து வருவதாக அவர் தெரிவித்தார்.


2006 ஆம் ஆண்டுப் புரட்சியை அடுத்து, பொதுநலவாய அமைப்பு, மற்றும் 16 பசிபிக் தீவுகளின் கூட்டமைப்பு ஆகியவற்றில் இருந்து அந்நாடு இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அத்துடன் ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உட்படப் பல நாடுகள் அந்நாட்டின் மீது மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

மூலம்