உள்ளடக்கத்துக்குச் செல்

பிஜியில் இராணுவச் சட்டம் விலக்கிக் கொள்ளப்படவுள்ளதாக அறிவிப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சனவரி 2, 2012

பசிபிக் தீவான பிஜியில் இராணுவச் சட்டம் இவ்வாரத்தில் விலக்கிக் கொள்ளப்படும் என பிஜியின் இராணுவத் தலைவர் கொமொடோர் பிராங்க் பைனிமராமா நேற்றுத் தனது புத்தாண்டுச் செய்தியில் அறிவித்துள்ளார்.


2006 ஆம் ஆண்டில் இராணுவப் புரட்சி மூலம் பதவிக்கு வந்த பைனிமராமா, "புதிய அரசியலமைப்புக்கான கலந்துரையாடல்கள் அடுத்த மாதம் ஆரம்பமாகும்," எனத் தெரிவித்தார். இக்கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்காக பொதுவான அவசரகாலச் சட்டம் சனவரி 7 ஆம் நாள் விலக்கிக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். 2009 ஏப்ரலில் அவசரகாலச் சட்டம் கொண்டுவரப்பட்டது.


இராணுவப் புரட்சி சட்டவிரோதமானது என பிஜியின் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து ஊடகத் தணிக்கை, மற்றும் பொதுக் கூட்டங்களுக்குத் தடை போன்ற சட்டங்களை அமுல் படுத்தினார். தேர்தல்கள் பின்போடப்பட்டதை அடுத்து அதே ஆண்டு பொதுநலவாய அமைப்பில் இருந்து பிஜி இடைநிறுத்தப்பட்டிருந்தது.


1987 ஆம் ஆண்டில் இருந்து பிஜியில் நான்கு முறை இராணுவப் புரட்சிகள் இடம்பெற்றன. உள்ளூர் பிஜி இனத்தவருக்கும், பிஜி-இந்தியர்களுக்கும் இடையே அங்கு அரசியல் முறுகல் நிலை இடம்பெற்று வந்தது.


2014 ஆம் ஆண்டில் தேர்தல்கள் நடத்தப்படும் என பைனிமாராமா நேற்றைய உரையில் உறுதியளித்துள்ளார். பிஜியர்கள் அனைவருக்கும் சம உரிமை அளிக்கப்படும் எனவும் கூறினார்.


பிஜிக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை அறிவித்த ஆத்திரேலியா, மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் இராணுவத் தலைவரின் நேற்றைய உரையை வரவேற்றுள்ளன. ஆனாலும், "அங்கு சனநாயகத்தைக் கொண்டு வருவதற்கு நீண்ட காலம் பிடிக்கும்." என ஆத்திரேலிய அமைச்சர் ரிச்சார்ட் மார்ல்ஸ் தெரிவித்தார்.


மூலம்

[தொகு]