உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை நீதிபதிகள் விவகாரம்: ஆஸ்திரேலிய, நியூசிலாந்து தூதர்களை பிஜி வெளியேற உத்தரவு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், நவம்பர் 3, 2009


இலங்கை நீதிபதிகள் விவகாரம் காரணமாக பிஜி தனது இரண்டு பெரும் அயல் நாடுகளான ஆஸ்திரேலியா, மற்றும் நியூசிலாந்து தூதுவர்களை அடுத்த 24 மணி நேரத்தினுள் வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது. இரண்டு நாடுகளும் பிஜியின் உள்விடயங்களில் தலையிடுவதாக அந்நாட்டின் இராணுவத் தலைவர் பிராங்க் பைனிமராமா குற்றம் சாட்டியுள்ளார்.


2006 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி செல்லாது என அந்நாட்டு உச்ச நீதீமன்றம் அப்போது தீர்ப்பு வழங்கியிருந்தது. இதனையடுத்து, கடந்த ஏப்ரல் மாதத்தில் பிஜி நீதிபதிகளைப் பதவியில் இருந்து நீக்கியிருந்த பைன்னிமராமா இலங்கையில் இருந்து நீதிபதிகளைப் பணியில் அமர்த்துவதற்கு முடிவு செய்திருந்தார்.


பிஜியின் உயர் இராணுவ அதிகாரிகள் பயணம் மேற்கொள்ளுவதற்கு ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் தடைகளை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


இவ்வார ஆரம்பத்தில், இலங்கை நீதிபதிகள் ஆஸ்திரேலியாவூடாக பிஜிக்குப் பயணம் மேற்கொள்ள ஆஸ்திரேலிய அரசு அவர்களுக்கு விசா தர மறுத்திருந்தது. இக்குற்றச்ச்சாட்டை ஆஸ்திரேலியா மறுத்திருப்பதாக சிட்னியில் உள்ள பிபிசி செய்தியாளர் நிக் பிறயண்ட் தெரிவித்தார்.


பிஜியில் எவரும் பணிகளைப் பொறுப்பேற்றால், அவர்கள் அனைவரும் ஏனைய பிஜிய இராணுவ அதிகாரிகளைப் போலவே பயணத் தடைகளை எதிர் நோக்க நேரிடும் என ஆஸ்திரேலிய அரசு ஏற்கனவே இலங்கை நீதிபதிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது என்று செய்தியாளர் குறிப்பிடுகிறார்.


1987 ஆம் ஆண்டில் இருந்து பிஜியில் நான்கு முறை இராணுவப் புரட்சிகள் இடம்பெற்றிருந்தன.

மூலம்

[தொகு]