உள்ளடக்கத்துக்குச் செல்

இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டித் தொடரை வென்றது இலங்கை

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சூன் 25, 2014

இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இங்கிலாந்தில் நடைபெற்ற துடுப்பாட்டத் தேர்வுப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை வெற்றி பெற்று இங்கிலாந்து மண்ணில் தனது முதலாவது தேர்வுத் தொடர் வெற்றியைப் பதிவு செய்தது.


தொடரின் இரண்டாவதும் கடைசியுமான இப்போட்டியில் நான்காம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி இரண்டாம் இன்னிங்சில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 457 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. மகேல ஜெயவர்தனா 79 ஆட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 8 வது விக்கெட்டுக்காக இணைந்து ஆடிய ரங்கன ஹேரத் மற்றும் தலைவர் மெத்தியூஸ் ஆகியோர் இணைந்து 149 ஓட்டங்களைப் பெற்றனர். அணித்தலைவர் மெத்தியூஸ் 160 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.


350 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இங்கிலாந்து தனது ஆட்டத்தை ஆரம்பித்தது. நான்காம் நாள் ஆட்ட முடிவில் அது 5 விக்கெட்டுகள் இழப்பில் 57 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.


நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இடைநிலை வீரர்கள் சில ஓட்டங்களுடனேயே ஆட்டமிழந்தனர். இங்கிலாந்தின் மொயீன் அலி திறமையாக ஆடி ஆட்டமிழக்காமல் தனது முதலாவது சதத்தைப் பெற்றார். மறுமுனையில் இவருடன் ஆடிய அன்டர்சன் 50 பந்துகளை எதிர்கொண்டு ஓட்டங்கள் எதுவும் பெறாமலே ஆட்டமிழந்தார். இறுதியில், ஒரு பந்து மட்டுமே வீச வேண்டிய நிலையில் இலங்கை அணி வெற்றி பெற்றது.


இலங்கை அணியின் சங்கக்கரா, ஜெயவர்த்தனா இருவரும் தேர்வுத் தரவரிசையில் 6வது இடத்தில் 11493 ஓட்டங்கள் பெற்று சமநிலையில் இருக்கின்றனர். இங்கிலாந்துடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணிக்கு அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச டுவிட்டர் மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.


மூலம்

[தொகு]