உள்ளடக்கத்துக்குச் செல்

இசுரேலுக்காக வேவு பார்த்தவருக்கு ஈரானில் தூக்குத்தண்டனை நிறைவேற்றம்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், திசம்பர் 28, 2010

மொசாட் என்ற இசுரேலின் உளவுத்துறை நிறுவனத்திற்காக வேவு பார்த்தார் எனக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் ஈரானில் தூக்கிலிடப்பட்டதாக ஈரானிய செய்திநிறுவனம் இர்னா அறிவித்துள்ளது.


ஈரானியரான அலி அக்பர் சியாதத் என்பவர் தெகரானின் எவின் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார். பல ஆண்டுகளாக இவர் மொசாட்டுடன் தொடர்பில் இருந்தவர் என்றும், ஈரானின் இராணுவத் தகவல்களை வழங்கி வந்தார் எனவும் இர்னா தெரிவித்துள்ளது.


இவர் 2008 ஆம் ஆண்டில் தனது மனைவியுடன் ஈரானில் இருந்து வெளியேற முயற்சித்த போது கைது செய்யப்பட்டார்.


தனது குற்றங்களை ஒப்புக்கொண்ட சியாதத் தான் வழங்கிய தகவல்களுக்காக "60,000 அமெரிக்க டொலர்களை சியோனிச ஆட்சியாளரிடம்" இருந்து பெற்றதாகத் தெரிவித்தார். ஈரானின் இராணுவத் தகவல்கள், போர் விமானங்கள், விமான விபத்துக்கள், ஏவுகணைகள் போன்ற பல தகவல்களை வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இவர் ஒரு அரச ஊழியரா என்பதும் எவ்வாறு அவர் இத்தகவல்களைப் பெற்றார் என்பதும் தெரிவிக்கப்படவில்லை.


சியாதத் துருக்கி, தாய்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்றிருந்த போதே இத்தகவல்களை மொசாடிற்கு வழங்கியிருந்ததாகச் சொல்லப்படுகிறது.


ஈரானியச் சட்டப்படி வேவு பார்த்தல் ஒரு மரணதண்டனைக்குரிய குற்றம் ஆகும். 2008 ஆம் ஆண்டில் ஈரானிய தொலைத்தொடர்புப் பொறியாளர் அலி அஷ்டாரி என்பவர் இசுரேலுக்கு உளவு பார்த்தமைக்காகக்த் தூக்கிலிடப்பட்டார்.


மூலம்

[தொகு]