உள்ளடக்கத்துக்குச் செல்

இசுரோவின் எஸ் அலைவரிசை விற்பனை குறித்து பாரதிய ஜனதா கண்டனம்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், பெப்பிரவரி 14, 2011

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இசுரோ எந்த வித ஏலமும் விடாமல் எஸ் பாண்டு எனப்படும் உயர் பெறுமதி, அரிதான வானொலி அலைவரிசையை தேவாஸ் நிறுவனத்திற்கு அளித்ததற்கு எதிராக பா.ஜ.க. தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.


மும்பையில் 'உத்தர் பாரதீய சம்மேளனம்' என்ற மாநாடு ஒன்றில் கலந்து கொள்ள வந்த பா.ஜ.க. செயலாளர் ரவி சங்கர் பிரசாத், செய்தியாளர்களிடம் பேசும் போது, சரியான ஏல நடவடிக்கைகள் இன்றி தனியாருக்குச் சொந்தமான தேவாஸ் நிறுவனத்திற்கு எஸ் பாண்டு உரிமம் வழங்கப்பட்டதற்கு எதிராகத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்தார்.


"இந்த உரிம ஒதுக்கீட்டைப் பற்றித் தங்களுக்கு எதுவும் தெரியாதென்றால் எப்படித் தாங்கள் ஒரு அரசு நிருவாகத்தை நடத்துகிறீர்கள்," என்று பிரதமரிடம் கேட்பேன் என்றும் தெரிவித்தார். இதற்கிடையில் இந்த ஒதுக்கீட்டால் அரசுக்கு எந்த நிதி இழப்பும் ஏற்படவில்லை என்று அரசு கூறியுள்ளது.


ஆனால், இது ஒரு ஊழல்; எஸ் பாண்டு உரிமத்தை தேவாஸ் நிறுவனத்திற்கு வழங்குவதற்கு முன்னர் எந்த ஒரு சரியான ஏல நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று திரு. பிரசாத் தெரிவித்தார்.


மத்தியப் பிரதேச முதல் அமைச்சர் பிரிதிவி ராஜ், பிரதமர் அலுவலக இணை அமைச்சராக இருந்த பொழுது இந்த முறையற்ற ஒதுக்கீடு குறித்து எதையும் சரியாக ஆராயாமல் விட்டுவிட்டார் என்று அவர் மீதும் பிரசாத் குற்றம் சாட்டினார். மேலும் கறுப்புப் பணம் குறித்த நடவடிக்கைகளில் அரசு சரியாகச் செயல்படவில்லை என்றும், உச்ச நீதிமன்றம் நாட்டின் மிகப் பெரிய வரி ஏய்ப்பாளரான அசன் அலியின் மிகப் பெரும் தொகை 'சுவிஸ் வங்கியில்' பதுக்கப்பட்டிருப்பது குறித்து வினா எழுப்பியதையும் பிரசாத் சுட்டிக்காட்டினார்.


மூலம்

[தொகு]