இணையத் தகவல்களை தணிக்கை செய்யும் திட்டம் இல்லை என இந்திய அரசு அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சனவரி 22, 2012

இந்தியாவில் இணையதளத் தகவல்களை தணிக்கை செய்யும் திட்டம் எதுவும் நடுவண் அரசிடம் கிடையாது என்று தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலாளர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இணையதள தகவல்களுக்கு கட்டுப்பாடு வேண்டும் என்ற கருத்து மீதான விவாதங்கள் வலுப்பெற்று வரும் நிலையில், அரசின் சார்பில் இந்த முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


சமயங்களுக்கு இடையே வெறுப்பைத் தூண்டும் வகையிலும், தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராகவும் தகவல்களை வெளியிட்டதாகக் கூறி கூகுள், யாஹூ!, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட 21 இணையதள நிறுவனங்கள் மீது, தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு சம்பந்தமாக கடந்த விசாரணையின் போது இணையதளங்களில் உள்ள சர்ச்சைக்குரியவற்றை நீக்க வேண்டும். இல்லையென்றால் சீனாவைப் போல அவற்றை இந்தியாவிலும் தடை செய்ய நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.


இந்த நிலையில் இணைய தளத்தில் வெளியாகும் தகவல்களை தணிக்கை செய்யும் திட்டம் எதுவும் நடுவண் அரசிடம் இல்லை என்று தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் கூறியுள்ளதுடன், ஒவ்வொரு நிறுவனமும் அந்தந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இயங்கினாலே போதுமானது. எனினும், சட்டதிட்டங்களை பின்பற்றுவதை உறுதிப்படுத்த சில நடைமுறைகளை உருவாக்குவது அவசியம் என்றும் கூறியுள்ளார்.


மூலம்[தொகு]