உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியக் கடற்படையினரின் தாக்குதலில் கடற்கொள்ளையர் 28 பேர் சிக்கினர்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், பெப்பிரவரி 7, 2011

இந்தியப் பெருங்கடலில் கடத்தப்பட்ட தாய்லாந்து மீன்பிடிப் படகொன்றை இந்தியக் கடற்படையினர் கைப்பற்றி அதிலிருந்த பல பணயக் கைதிகளை விடுவித்தனர். 28 கடற்கொள்ளையர்களும் பிடிபட்டதாக இந்தியப் பாதுகாப்புத் துறையினர் அறிவித்துள்ளனர்.


இந்தியாவின் தென்மேற்குக் கரையில் இந்தியக் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஒன்றிலேயே இப்படகு கைப்பற்றப்பட்டது. இவ்வாரத்தில் இந்தியக் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான இரண்டாவது தாக்குதல் இதுவாகும். கடந்த சில ஆண்டுகளாக சோமாலியக் கடற்கொள்ளையர் இந்தியப் பெருங்கடலில் பெருமளவு படகுகளை கொள்ளையடித்து வருகின்றனர்.


கடந்த சனிக்கிழமை மாலை கிரேக்கச் சரக்குக் கப்பல் ஒன்று கொள்ளையர்களினால் தாக்கப்பட்டது என்ற தகவல் இந்தியக் கடற்படையினருக்கு எட்டியதை அடுத்து கடற்படையினரின் நடவடிக்கை ஆரம்பமானது. கிரேக்கக் கப்பல் இத்தாகுதலில் இருந்து தப்பியது எனினும், ஞாயிறு காலையில் இரண்டு கடற்படைக் கப்பல்கள் கொள்ளையர்களைக் கலைத்துச் சென்றதில் பிரந்தாலாய் 11 என்ற தாய்லாந்து மீன்பிடிப் படகு பிடிபட்டது. இப்படகை கடற்கொள்ளையர் தமது தாக்குதல்களுக்குப் பயன்படுத்தி வந்துள்ளனர்.


கடும் துப்பாக்கித் தாக்குதலை அடுத்து கடற்கொள்ளையர் சரணடைந்ததாக இந்தியக் கடற்படையினர் தெரிவித்தனர். தாய்லாந்துப் படகில் பயணக் கைதிகளாக இருந்த 24 தாய்லாந்து, மற்றும் பர்மிய மாலுமிகளை அவர்கள் விடுவித்தனர். இப்படகு சென்ற ஆண்டு கொள்ளையர்களினால் கைப்பறப்பட்டிருந்தது.


இவர்கள் அனைவரும் இப்போது மும்பாய் கொண்டு செல்லப்பட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் இந்தியக் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட வேறொரு தாக்குதலில் படகொன்று மூழ்கடிக்கப்பட்டது.


மூலம்[தொகு]