இந்தியப் பெருங்கடலின் கீழ் பண்டைய கண்டம் ஒன்றின் சிதறல்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிப்பு
- 26 நவம்பர் 2013: புத்தர் பிறந்த இடத்தில் கிமு 6ம் நூற்றாண்டு காலக் 'கோவில்' கண்டுபிடிக்கப்பட்டது
- 9 ஆகத்து 2013: மாயன் காலத்து அரிய சிற்பங்கள் குவாத்தமாலாவில் கண்டுபிடிப்பு
- 11 சூலை 2013: சீனாவில் 5,000 ஆண்டுகள் பழைமையான எழுத்துகளைக் கொண்ட கற்கோடாலிகள் கண்டுபிடிப்பு
- 28 சூன் 2013: பெருவில் 1,200 ஆண்டுகள் பழமையான வாரி அரசுக் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது
- 2 சூன் 2013: இலங்கையில் சீதைக்குக் கோவில், இந்தியா அறிவிப்பு
திங்கள், பெப்பிரவரி 25, 2013
இந்தியப் பெருங்கடலின் அடியில் 2,000 முதல் 85 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பண்டைய கண்டம் ஒன்றின் சிதறல்கள் காணப்படுவதாக புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
புதிய உலகம் தோன்றி தற்போதைய வடிவம் எடுக்கும் முன்னர் இருந்த நிலத் துண்டு காலப்போக்கில் சிதறி கடலுக்கடியில் சென்றுள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலத்துண்டுக்கு அவர்கள் மொரீசியா (Mauritia) எனப் பெயரிட்டுள்ளனர். இது குறித்த ஆய்வு முடிவுகள் நேச்சர் ஜியோசயன்சு இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
750 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் புவியின் நிலப்பகுதி ரொடீனியா எனப்படும் ஒரு பெரும் கண்டமாக உருவெடுத்திருந்தது. தற்போது இவை பல துண்டுகளாக பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் கடல்பரப்பினால் பிரிக்கப்பட்டிருந்தாலும், இந்தியா ஒரு காலத்தில் மடகாஸ்கருக்கு அருகிலேயே அமைந்திருந்தது. இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே நிலத்துண்டு - குறுங்கண்டம் - ஒன்று இருந்ததற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
மொரீசியசு நாட்டின் கடற்கரைகளில் கிடைக்கக்கூடிய மண் மாதிரிகளை ஆராய்ந்த அறிவியலாளர் குழுவே மேற்கண்ட முடிவுக்கு வந்துள்ளது. ஒன்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற எரிமலை வெடிப்புக்கு முன்னர் இந்த சிர்க்கான் எனப்படும் கனிமங்கள் இருந்ததாகக் கணிக்கப்பட்டிருந்தாலும், அவை மேலும் பழைமையானவை எனக் கூறப்படுகிறது. நோர்வேயின் ஒசுலோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ட்ரொண்ட் தோர்சுவிக் என்பவர் தலைமையில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
மொரீசியாவின் சிதறிய துண்டுகள் மொரீசியசின் கீழ் 10 கிமீ ஆழத்தில் இருப்பதாகத் தாம் நம்புவதாக பேராசிரியர் தோர்சுவிக் பிபிசிக்கு தெரிவித்தார். 85 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மடகாசுக்கரில் இருந்து இந்தியா பிரிந்த போது குறுங்கண்டம் துண்டுகளாகச் சிதறி கடலுக்கடியில் சென்றிருக்கலாம் என தோர்சுவிக் தெரிவித்தார். தொலைந்த இந்தக் கண்டத்தின் எச்சங்களைக் கண்டுபிடிப்பதற்கு மேலும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன என அவர் கூறினார்.
மூலம்
[தொகு]- Fragments of ancient continent buried under Indian Ocean, பிபிசி, பெப்ரவரி 25, 2013
- A Precambrian microcontinent in the Indian Ocean, நேச்சர், பெப்ரவரி 24, 2013