உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியப் பெருங்கடலில் சீனா இராணுவத் தளம் அமைக்க முடிவு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், திசம்பர் 13, 2011

இந்தியப் பெருங்கடலில் சிசெல்சு தீவுக் கூட்டத்தில் தனது இராணுவத் தளத்தை அமைக்கப் போவதாக சீனா நேற்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது.


சீனக் கடற்படைக்குத் தேவைப்படும் கருவிகளையும் சாதனங்களையும் வழங்கவும், அதற்குத் தேவைப்படும் பழுதுபார்ப்பு, பராமரிப்பு உள்ளிட்ட பணிகளைச் செய்யவும் இந்தத் தளம் பயன்படுத்திக் கொள்ளப்படும் என்று அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது.


இந்து மகா சமுத்திரத்தில் சீனக் கடற்படை போரில் ஈடுபட்டால் அதற்குத் தேவைப்படும் ஆயுதங்களையும் வெடிகுண்டுகளையும் எரிபொருளையும் நிரப்பிக்கொள்ளவும் பழுதுபார்க்கவும் இந்தத் தளம் முக்கியமான மையமாகச் செயல்படும். இதன் மூலம், சீன இராணுவ நோக்கங்களுக்கு இந்த மையம் உதவும் என்பது வெளிப்படையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.


இந்த மாதத்தின் ஆரம்பத்தில் சிசெல்சு நாட்டுக்கு 'நல்லெண்ணப் பயணமாக'ச் சென்ற சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங் லீ, இது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டுத் திரும்பியுள்ளார். இராணுவத் தளம் மட்டுமின்றி, சிசெல்சு நாட்டுப் பாதுகாப்புப் படையினருக்கு பயிற்சி அளிக்கவும் சீனா ஒப்புக் கொண்டுள்ளது.


உலகின் மிகப்பெரிய கடற்படைகளில் ஒன்று சீனாவிடமும் இருக்கிறது. ஆனால் அதில் இதுவரை விமானந்தாங்கிக் கப்பல் சேர்க்கப்படவில்லை. இப்போது முதல்முறையாகச் சேர்க்கப்படவிருக்கிறது. இந்த நிலையில் சீசெல்சுத் தீவில் அதற்கு தளம் அமைவது முக்கியத்துவம் வாய்ந்தது என அவதானிகள் கருதுகின்றனர்.


ஏற்கெனவே ஐநா நிறுவனமான பன்னாட்டுக் கடல் படுகை ஆணையத்துடன் அது செய்து கொண்ட ஒப்பந்தத்தால் சுமார் 10,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு இந்தியப் பெருங்கடலில் கிடைக்கும் கனிமங்களை ஆய்வு செய்யவும், எடுத்துக்கொள்ளவும் வழி ஏற்பட்டிருக்கிறது. அடுத்த வாய்ப்பாக இந்தத் தளம் கிடைத்திருக்கிறது. ஏற்கெனவே சிபூட்டி, ஓமான், யேமன் ஆகியவற்றில் சீனாவுக்கு இதே போல ராணுவ தளங்கள் அமைந்துள்ளன.


சிசெல்சு சுமார் 115 தீவுகள் கொண்ட தீவுக்கூட்டமாகும். இவை நெருக்கமாக இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக சுமார் 5 லட்சம் சதுர மைல் பரப்பில் உள்ளன. இந்தத் தீவுக்கூட்டங்களை 3 பெரும் பிரிவாகப் பிரித்திருக்கிறார்கள். சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லக்கூடிய இடமாக இருப்பதைத் தவிர்த்து இந்த தீவுக்கூட்டங்கள் வேறு எதற்கும் அதிகம் பயன்படுவது கிடையாது. ஆபிரிக்காவின் கிழக்குக் கடலோரத்திலிருந்து சுமார் 1,000 மைல் தொலைவில் இருக்கிறது. பன்னாட்டுக் கடல் வாணிபத்தில் ஈடுபட்டுள்ள கப்பல்களை வழிமறித்து கொள்ளையடிக்கும் கடல் கொள்ளைக்காரர்களைப் பிடிக்கவும் ஒடுக்கவும் இந்த தளம் சீனத்துக்கு உதவும் என்று சிசெல்சுத் தீவின் வெளியுறவு அமைச்சர் ஜீன் பால் ஆடம் கூறியுள்ளார்.


மூலம்

[தொகு]