உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியப் பொதுத் தேர்தல் 2014: தமிழகம் எதிர்கொள்ளவிருக்கும் வித்தியாசமான தேர்தல்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, மார்ச்சு 23, 2014


இந்திய மக்களவைக்கான தேர்தல், எதிர்வரும் ஏப்ரல் 24 அன்று தமிழ்நாட்டில் நடக்கவிருக்கிறது. களமிறங்கும் கூட்டணிகளின் அடிப்படையில் பார்க்கும்போது, இத்தேர்தல் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருக்குமென அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.


அண்மைக்கால தமிழகத் தேர்தல்களில் இவ்வளவு கடுமையான போட்டி நிலவியதில்லை. நாடாளுமன்றத் தேர்தல்களைப் பொறுத்தளவில் தமிழ்நாட்டில் எப்போதுமே ஓரளவு தெளிவான முடிவுகளை முன்கூட்டியே கணிக்க இயலும். ஆனால் இம்முறை கணிப்பு என்பது கடினமாக உள்ளது. அதிமுக, திமுக கூட்டணி, பாஜக கூட்டணி எனும் வலுவான 3 அணிகள் களத்தில் இருப்பதே இதற்குக் காரணம். அதிமுக - திமுக கூட்டணி - பாஜக கூட்டணி – காங்கிரசு – இடதுசாரிக் கட்சிகள் என நடக்கும் பல்முனைப் போட்டியில் வாக்குகள் பிரியும் வாய்ப்புகள் இருப்பதால், எந்தக் கூட்டணி முன்னிலை பெறும் என்பதனைக் கணிக்க இயலவில்லை.


அதிமுக

அதிமுக எக்கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை. துவக்கத்தில் இடதுசாரிக் கட்சிகளுடன் கூட்டணி ஏற்படும் நிலை இருந்தது. ஆனால், தொகுதிப் பங்கீட்டில் சமரசம் ஏற்படாததால் கூட்டணி அமையவில்லை. தனது மூன்றாண்டு கால ஆட்சியின் சாதனைகளை முன்னிறுத்தி வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.


திமுக கூட்டணி

தேமுதிகவுடன் கூட்டணி அமையுமென எதிர்பார்க்கப்பட்டது. காங்கிரசுடனும் கூட்டணி அமையவில்லை. இறுதியில் விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், முஸ்லிம் லீக் எனும் சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களத்தில் இறங்கியுள்ளது திமுக. தற்போதைய அதிமுக அரசின்மீது குறைகளை சுமத்தி திமுக தேர்தல் பரப்புரை செய்துவருகிறது.


பாஜக கூட்டணி

தமிழகத்தின் இரு பாரம்பரிய திராவிடக் கட்சிகளான திமுக, அதிமுகவுக்கு எதிராக களம்நிற்கும் ஒரு வலுவான அணியாக பாஜக கூட்டணியை அரசியல் விமர்சகர்கள் பார்க்கிறார்கள். இந்தியாவில் மோடி அலை வீசுவதாக இந்திய ஊடகங்கள் கருத்து தெரிவித்துவரும் வேளையில், தமிழகத்தின் பாஜக கூட்டணியானது வலுவான அணியாக கருதப்படுகிறது. கூட்டணியிலுள்ள மாநிலக்கட்சிகள் குறிப்பிட்ட வட்டாரங்களில் செல்வாக்கினைப் பெற்றுள்ளன. உதாரணமாக பாமகவுக்கு வடதமிழகத்திலும், மதிமுகவுக்கு தென்தமிழகத்திலும் தனிப்பட்ட செல்வாக்கு உண்டு. இப்பகுதிகளில் பாஜக கூட்டணிக்கு பெருவாரியான வாக்குகள் ஒன்றுசேரும் என கணிக்கப்படுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக குறிப்பிடத்தக்க அளவு வாக்குகளைப் பெற்றிருந்தது. இதற்கு அதிமுகவுடன் அப்போது கொண்டிருந்த கூட்டும் காரணமாக இருக்கக்கூடும். அப்போது தேமுதிகவுக்கு இருந்த ஆதரவு இப்போதும் தொடருமானால், இக்கூட்டணிக்கு குறிப்பிடத்தக்க இடங்கள் கிடைக்குமென அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.


காங்கிரசு

காங்கிரசு எந்தக் கூட்டும் இன்றி தனியே தேர்தலை சந்திக்கிறது. காங்கிரசுக்கென்று இருக்கும் பாரம்பரிய வாக்குவங்கியின் நிலை தற்போது எப்படி இருக்கிறது என்பது குறித்து எவ்விதத் தரவும் இல்லை. தமிழ்நாட்டின் காங்கிரசுத் தலைவர்கள் ப. சிதம்பரம், ஜி. கே. வாசன், கே. வி. தங்கபாலு ஆகியோர் இம்முறை தேர்தலில் நிற்கவில்லை. காங்கிரசை நான்காவது அணியாகவே தமிழக ஊடகங்கள் பார்க்கின்றன.


இடதுசாரி கூட்டணி

பெரும்பாலான தேர்தல்களில் ஏதேனுமொரு திராவிடக்கட்சியுடன் கூட்டணி அமைத்து களமிறங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள், இம்முறை தமக்குள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. தொழிற்சங்கங்களில் உறுப்பினராக இருக்கும் வாக்காளர்களின் வாக்குகளை இக்கூட்டணி பிரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.


இத்தேர்தலுக்காக இதுவரை வெளியான சில கருத்துக் கணிப்புகள், கூட்டணி நிலைகள் முடிவாவதற்கு முன்பு செய்யப்பட்டவையாகும். புதிய கருத்துக் கணிப்புகள், யாருக்கு மக்களின் ஆதரவு என்பதனை ஓரளவு கணிக்கக்கூடும். ஆனால், இன்றைய சூழலில் எந்த அணி முன்னிலை வகிக்கிறது என்பதைச் சொல்வது கடினமே.மூலம்[தொகு]

Wikinews
Wikinews
இக்கட்டுரை விக்கிசெய்திகளின் உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்ட நேரடிச் செய்தியாகும்.