உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியர்கள் மீது ஆஸ்திரேலியாவில் மேலும் தாக்குதல்கள்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சனவரி 23, 2010


ஆஸ்திரேலியாவில் கடந்த இரு நாட்களில் மேலும் இரு இந்தியர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இந்தியர்கள் மீதான தாக்குதல் தொடர்வதால் வருத்தப்படுவதாக நேற்று பிரதமர் கெவின் ரட் கூறியிருந்த நிலையில் மீண்டும் தாக்குதல் நடந்துள்ளது.


டாக்சி ஓட்டுநர் ஒருவர் உள்பட மேலும் இரு இந்தியர்கள் குயின்ஸ்லாந்து தலைநகர் பிரிஸ்பேனில் தாக்கப்பட்டுள்ளனர். கடந்த இரு வாரங்களில் மட்டும் ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்பபடுவது இது ஏழாவது நிகழ்வாகும்.


கடந்த வியாழன் அன்று இரவு 25 வயது இளைஞர் ஒருவர் கரிண்டேல் என்ற இடத்தில் தாக்கப்பட்டார். தனது வீட்டுக்கு அருகே உள்ள தொலைபேசி சாவடியில் தாக்கப்பட்டதாகவும் தாக்குதலின்போது அவர் தலையில் பலத்த்ஹ அடிபட்டதாகவும் ஆஸ்திரேலியக் காவல்துறையினர் தெரிவித்தனர். அவரது பணப்பையும் கொள்ளையடிக்கப்பட்டது.


இந்திய டாக்சி ஓட்டுநர் நேற்றுக் காலை தாக்கப்பட்டார். பிரிஸ்பனின் தென் கிழக்குப் பகுதியில் மாக்கிரெகர் என்ற இடத்தில் அந்த டாக்சி ஓட்டுநருக்கும் அவரது டாக்சியில் சென்ற இரு பயணிகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் தாக்கப்பட்டதாக காவல்துறையினர் கூறினர். டாக்சி ஓட்டுநர் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிஸ்பேன் காவல்துறையினர் தெரிவித்தனர்.


இம்மாதம் 2-ந்தேதி மெல்பர்ணின் புறநகர்ப் பகுதியில் நிதின் கார்க் என்ற இந்திய மாணவர் தாக்கப்பட்டு இறந்தார். 9-ந்தேதி இந்தியர் ஒருவரை நான்கு பேர் தீவைத்து கொல்ல முயன்றனர். அவர் தீக்காயங்களுடன் உயிர் தப்பினார். கடந்த 16-ந்தேதி டாக்சி ஓட்டுநர்கள் 3 பேர் மெல்பேர்ணில் தாக்கப்பட்டனர்.


இதாக்குதல்கள் குறித்து கவலை வெளியிட்டுள்ள கெவின் ரட், இந்தியர்கள் மீதான தாக்குதல் இனவெறி தொடர்பானதல்ல என மீண்டும் தெரிவித்துள்ளார்.

தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]