உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியாவின் தேசிய கீதத்துக்கு வயது நூறு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், திசம்பர் 29, 2011

இந்தியாவின் நாட்டுப்பண்ணாக விளங்கும் 'ஜன கண மன'வுக்கு டிசம்பர் 27ம் திகதி நூறு ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் முகமாக நாடு முழுவதும் நேற்று முன்தினம் கோலாகலமான கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.


ஜன கண மன இசை வடிவம்

இலக்கியத்துக்காக நோபல் பரிசு வென்ற முதல் ஆசியரான வங்காளக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் சமக்கிருதம் கலந்த வங்க மொழியில் எழுதிய இப்பாடல் 1911 டிசம்பர் 27-ல் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தியக் காங்கிரஸ் கட்சி மாநாட்டில் முதன்முறையாகப் பாடப்பட்டது. அன்று முதல் இந்தியா முழுதும் ஜன கண மன இசைக்கப்பட்டு மக்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. பிற்பாடு இது பல்வேறு சர்ச்சைகளை எல்லாம் சமாளித்து இந்தியாவின் நாட்டுப்பண்ணாக உருவெடுத்தது.


ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போர் தொடுத்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தனது இந்திய தேசிய ராணுவப் படையின் தேசியப் பண்ணாக இந்தப் பாடலை அறிவித்தார். வடக்கில் எழுத்துருவும், தெற்கில் இசையுருவும் பெற்ற இப்பாடல் இந்தியர்கள் அனைவரின் மனதிலும் தேசப் பக்தியை பொங்கியெழுச் செய்து விடுதலைக்கு வித்திட்டது.


நாடு சுதந்திரம் அடைந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 1950 சனவரி 24-ம் தேதி "ஜன கண மன...' தேசிய கீதமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.


மூலம்

[தொகு]