இந்தியாவில் வேட்பாளர்களின் செலவு வரம்பை உயர்த்தப் பரிந்துரை

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, பெப்பிரவரி 13, 2011

இந்தியாவில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவு உயர் வரம்பை உயர்த்த நடுவண் சட்ட அமைச்சகத்திற்குப் பரிந்துரை செய்திருப்பதாகச் சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய தேர்தல் ஆணையாளர் குரேஷி தெரிவித்தார்.


சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வெள்ளிக்கிழமை 'தேசிய தேர்தல் கண்காணிப்பு' (National Election Watch) என்ற அமைப்பு நடத்திய இந்திய அளவிலான தேர்தல் குறித்த கருத்தரங்கில் கலந்துகொண்ட திரு. குரேஷி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவு உயர் வரம்பை 60 விழுக்காடு உயர்த்த இந்தியச் சட்ட அமைச்சகத்திற்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றும், இதற்கான சட்ட அமைச்சகத்தின் இசைவு பெற்ற பின்னர் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்தார். இதன்படி,தேர்தல் செலவின் உயர் வரம்பு, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு 25 இலட்சத்திலிருந்து 40 இலட்சமாகவும், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு 10 இலட்சத்திலிருந்து 16 இலட்சமாகவும் உயர்த்தப்படும். வேட்பாளர்களுக்கான செலவு உயர் வரம்பை அதிகரிப்பது போல் அரசியல் கட்சிகளின் செலவு உயர் வரம்பு அதிகரிக்கப்படுவது குறித்தும் உரிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.


மேலும் அவர் பேசும்போது, "வாக்குப்பதிவு இயந்திரங்களில் தேவைப்படும் மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்துப் போதிய முடிவுகள் எடுக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு ஏற்கனவே அரசியல் கட்சிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்துள்ளது. இது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன; தேர்தல் விதி மீறல்கள் குறித்துப் புகார் தெரிவிக்க ஒருங்கிணைந்த மையம் ஏற்படுத்தப்பெற்று, அதற்கு மாநில அளவில் ஒரு தொடர்பு எண்ணும் வழங்கப்படும்; பள்ளிப்பாட ஏடுகளில் தேர்தல், வாக்களித்தல் குறித்தப் பாடங்களைச் சேர்க்க உரிய துறைகளிடம் பேச்சு நடத்தப்படும்," என்றார்.


மூலம்[தொகு]