இந்தியா எடை கூடிய ஏவுகலத்தை ஆளில்லா குடிலுடன் செலுத்தியது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், திசம்பர் 18, 2014

இந்தியா 630 டன் எடையும் 43.43 மீட்டர் உயரமுடைய புவிசுற்றிணைவு செயற்கைக்கோள் ஏவுகலத்தை சிறீகரிகோட்டாவில் இருந்து வியாழன் காலை ஏவியது.


இவ்வேவுகலம் எடை கூடுதலான செயற்கைகோள்களை விண்ணுக்கு எடுத்துச்செல்லும் திறன் வாய்ந்தது. 4,000 கிலோ எடையுடைய செயற்கை கோள்களை இதன் மூலம் ஏவலாம்.


இந்தியா இதுவரை எடை குறைந்த செயற்கைகோள்களையே விண்ணுக்கு செலுத்தும் திறன் பெற்றிருந்தது. இவ்வேவுகலத்தின் மூலம் எடை கூடிய தொலை தொடர்பு செயற்கை கோள்களை ஏவுவதற்கு வெளிநாட்டு ஏவுகலங்களை நம்பியிருக்க தேவையில்லை.


இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் ராதாகிருட்டிணன் இந்திய விண்வெளி வரலாற்றில் இது குறிப்பிடத்தகுந்த நாள் என்று கூறினார்.


இரண்டு அல்லது மூன்று விண்வெளிவீரர்களை கொள்ளும் 3,775 கிலோ எடையுடைய குடிலை பொதியாக இவ்வேவுகலம் ஏற்றிச்சென்றது. அக்குடில்கள் அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கு அருகில் ஏவுகலம் ஏவப்பட்ட 20 நிமிடம் கழித்து கடலில் பத்திரமாக வந்தடைந்ததால் குடில்கள் சோதனை வெற்றி என இந்திய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்தது.


இவ்வேவுகலம் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு டிவிட்டரில் இந்திய பிரதமர் மோதி வாழ்த்து தெரிவித்தார்.


செப்டம்பரில் செவ்வாய் கோளின் சுற்றுப்பாதைக்கு இந்தியா வெற்றிகரமாக செயற்கைகோளை செலுத்தியது.மூலம்[தொகு]

  • GSLV Mk-III X/CARE Mission இந்திய விண்வெளி ஆய்வு மையம், 2014 டிசம்பர் 18.