இந்திய அறிவியலாளர்கள் புதிய புற்றுநோய் சிகிச்சை முறையைக் கண்டுபிடித்தனர்

விக்கிசெய்தி இலிருந்து

புதன், நவம்பர் 17, 2010


இந்தியாவில் நடுவண் அரசின் கீழ் இயங்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) புற்று நோயைக் குணப்படுத்த ஒரு புதிய முறையை கடந்த பல வருடங்களாக நடத்திய ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடிப்பதில் வெற்றி கண்டுள்ளது.


2-டிஆக்சி-டி-குளுக்கோசின் ஐயூபிஏசி பெயரீடு

2-டிஆக்சி-டி-குளுக்கோசு (‎2-Deoxy-D-Glucose (2-DG)‎)வகை சார்ந்த ஒரு மருந்தை இந்நிறுவனம் கண்டுபிடித்து, சோதனைகள் நிகழ்த்திய பிறகு, அதற்கான ஒப்புதலையும் அவர்கள் இந்திய மருந்துகள் தலைமைக் கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகத்தில் இருந்து பெற்றுள்ளனர்.


இந்த மருந்தை கதிரியக்க சிகிச்சை அளிக்கும் முன்னர் வேதிச்சிகிச்சை முறையில் அளிக்க வேண்டும். இதனால் புற்று நோயால் பாதிப்படைந்த கலன்கள் குளுக்கோசுக்குப் பதிலாக 2-டிஆக்சி-டி-குளுக்கோசை அதிக அளவில் உறிஞ்சிக்கொள்ளும். இதனால் இக்கலன்கள் வலுவிழந்துவிடும். இந்த நிலையில் கதிரியக்கக சிகிச்சை அளிக்கும் பொழுது, புற்று நோயால் பாதிக்கப்பெற்ற வலுவிழந்த கலன்கள் அழிந்து விடும். அதிக அளவில் புற்று நோயால் பாதிப்படைந்த கலன்கள் இனப்பெருக்கம் அடைவது குறைவதாலும், அதிக அளவில் அழிவதாலும், பாதிப்பின் அளவு சிகிச்சைக்குப் பிறகு குறையும், மேலும் தேவைக்கேற்றவாறு கதிரியக்கத்தின் ஆற்றலைக் குறைவாக பயன்படுத்தி உடலின் இதர பாகங்களையும், உறுப்புகளையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.


இந்த மேம்பட்ட சிகிச்சை முறையில் புற்று நோயின் தாக்கத்தை ஓரளவிற்கு முன்கூட்டியே குறைக்க இயலும்.நோயாளியின் வாழ்க்கைத் தரம் மேம்படும். பக்க விளைவுகளும் குறைவாகக் காணப்படும். மேலும் புற்று நோய் கலன்களையே நேரடியாகத் தாக்குவதால், அதிக பயன் அளிக்க வல்லதாகும்.


மூலம்[தொகு]