உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய மாணவன் கொலை: ஆத்திரேலிய இளைஞருக்கு 13 ஆண்டுகள் சிறை

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், திசம்பர் 22, 2011

இந்திய மாணவர் ஒருவரை குத்திப் படுகொலை செய்த குற்றத்திற்காக ஆத்திரேலிய இளைஞர் ஒருவருக்கு 13 ஆண்டு கால சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.


2010 சனவரி மாதத்தில் மெல்பர்ண் நகரில் நித்தின் கார்க் என்ற 21 வயது மாணவனை கொலை செய்ததை 17 வயது ஆத்திரேலிய இளைஞர் ஒப்புக் கொண்டுள்ளார். இப்படுகொலையை அடுத்து இந்தியாவுக்கும் ஆத்திரேலியாவுக்கும் இடையில் பெரும் முறுகல் நிலை தோன்றியிருந்தது. அங்கு வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. சிட்னியிலும் மெல்பர்னிலும் இந்திய மாணவர்கள் பலர் தாக்கப்பட்டனர். இந்நிகழ்வுகளை அடுத்து ஆத்திரேலியாவுக்கு வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.


பஞ்சாப்பைச் சேர்ந்த நிதின் கார்க் மெல்போர்னில் மேற்கு பூட்ஸ்கிரே என்ற இடத்தில் உள்ள "த ஹங்க்றி ஜாக்ஸ்" உணவகத்தில் அவர் பகுதி நேர வேலையும் செய்து வந்தார். இரவு அவர் பணிக்குச் சென்று கொண்டிருந்த போது ஆத்திரேலிய இளைஞர்கள் சிலர் கும்பலாக வந்து நித்தினைத் தாக்கினர். ஒருவர் கத்தியால் பல முறை குத்தியுள்ளார். அவர் ஓட ஓட விரட்டிச் சென்று தாக்கினார்கள். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


இறந்தவரின் கைத்தொலைபேசியைப் பறிக்கவே தாம் அவரைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டவர் தெரிவித்தார். "இது இனவெறித் தாக்குதல் அல்லாமல், தற்செயலாக இடம்பெற்றதே," என நீதிபதி போல் கோக்லன் தெரிவித்தார். எட்டு ஆண்டு சிறைக்குப் பின்னர் இவ்விளைஞர் நான்னடத்தைப் பிணையில் விடுவிக்கப்படலாம் என நீதிபதி தெரிவித்தார்.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]