உள்ளடக்கத்துக்குச் செல்

இரண்டரை ஆண்டுகளாக உறக்கத்தில் இருந்த 'ரொசெட்டா' விண்கலம் விழித்தெழுந்தது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சனவரி 23, 2014

வால்வெள்ளி ஒன்றைத் தேடி 2004 ஆம் ஆண்டில் விண்ணுக்கு ஏவப்பட்ட ஐரோப்பாவின் ரொசெட்டா விண்கலம் கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பின்னர் மீண்டும் விழித்துக் கொண்டது.


ரொசெட்டாவில் இருந்து வெளிவந்த குறிப்பு ஒன்று செர்மனியில் டார்ம்ஸ்டார்ட் நகரக் கட்டளை மையத்திற்கு கடந்த திங்கட்கிழமை சனவரி 20 இல் கிடைத்தது.


67பி/சுரியூமொவ்-கெராசிமென்கோ என்ற வால்வெள்ளியில் இறங்குவதற்காக இந்த விண்கலம் ஏவப்பட்டிருந்தது. சூரியனில் இருந்து மிக நீண்டளவு தூரத்தில் இது தற்போது நிலை கொண்டுள்ளமையால், இதன் சூரியக் கலங்கள் மிகவும் குறைந்தளவு சூரிய ஆற்றலைக் கொண்டுள்ளது. இதனால் விண்கலத்தை முழுமையாக இயக்குவதற்குத் தேவையான மின்சாரம் போதாமையாக இருப்பதால் அதனை 2011 ஜூன் முதல் 31 மாதங்களுக்கு தூக்கத்தில் வைப்பதற்கு அதன் கட்டுப்பாட்டாளர்கள் முடிவெடுத்தனர்.


உறக்கத்தில் இருந்து விழித்துக் கொண்ட விண்கலத்தை தகுந்த பாதையில் செலுத்துவதற்கு வானியலாளர்கள் முயன்று வருகிறார்கள். 4.5 கிமீ அகலமுள்ள வால்வெள்ளியில் பீலே என்ற தானியங்கியை இது தரையிறக்கும். இந்நிகழ்வு அனேகமாக இவ்வாண்டு நவம்பரில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இவ்விண்கலம் தற்போது கிட்டத்தட்ட 800 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மே மாதத்தில் விண்கலத்தில் இருந்து 9 மில்லியன் கிமீ தூரத்தில் உள்ள 67பி வால்வெள்ளியை நோக்கி இது செல்ல ஆரம்பிக்கும். செப்டம்பர் மாத நடுப்பகுதியில் 10கிமீ தூரத்தில் இருக்கும். பனிக்கட்டியும், தூசுகளும் நிறைந்த வால்வெள்ளியை ரொசெட்டா விண்கலம் சுற்றி வந்து வால்வெள்ளியின் தரை மீது ஒரு சிறு தளவுளவியை நவம்பரில் கீழிறக்கும்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]